வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (28/08/2018)

கடைசி தொடர்பு:18:20 (28/08/2018)

கேரள மக்களுக்காக நிதி அளித்து நெகிழவைத்த பூம்பூம் மாட்டுக்காரர்கள்..!

திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பூம்பூம் மாட்டுக்காரர்களான பழங்குடியின மக்கள் கேரள மக்களுக்காகத் தங்களால் முடிந்த நிதியான 10,000 ரூபாயை வசூல் செய்து இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜிடம் வழங்கினர்.

பூம்பூம் மாட்டுக்காரர்கள்

கேரளத்தில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழையால் அங்கு உள்ள அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. இதுமட்டுமல்லாமல் கேரளாவே மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். 

இதனால் கேரள மாநிலமே தங்களுடைய இயல்பு நிலையை இழந்துள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கேரள அரசும் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு மற்றும் அண்டை மாநில அரசுகள் மற்றும் பொதுமக்கள் தங்களால் முடிந்தவரை நிவாரணங்களைப் பொருள்களாகவும் பணமாகவும் கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பூம்பூம் மாட்டுக்காரர்களான பழங்குடியின மக்கள் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூபாய் 10,000 நிதியை வழங்கியுள்ளனர். இவர்கள் திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருவாஞ்சியம், மன்னார்குடி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள  பழங்குடி இனத்தைச் சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர்கள். கேரள வெள்ள நிவாரண நிதிக்காகத் தங்கள் பழங்குடியின மக்களிடமிருந்து நிவாரணமாகப் பெற்ற ரூ. 10,000-க்கான வரையோலையை  மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜிடம் வழங்கினர். இதை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உங்களுடைய இந்தச் செயல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோல் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் எனக் கூறி பூம்பூம் மாட்டுக்காரர்களைப் பாராட்டினார்.

இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, ``நாங்க 10 ரூபாய், 50 ரூபாய்னு வசூல் செய்தோம். எங்க இனத்துல உள்ளவங்க அவங்க அவங்களால முடிஞ்சத கொடுத்தாங்க ஏதோ எங்களால முடிந்த அளவுக்கு நாங்க கொடுத்துருக்கோம். கேரள மக்கள் மீண்டும் நல்ல நிலமைக்கு வர வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறோம்" என்று கூறினர்.