குறையோடு வந்த மக்களை உணவோடு அனுப்பி வைத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் குறைகளோடு வந்திருந்தவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கி நெகிழ்ச்சியடைய வைத்தார் புதிய ஆட்சியர் வீரராகவராவ்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் குறைகளோடு வந்திருந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கி நெகிழ்ச்சியடைய வைத்தார் புதிய ஆட்சியர் வீரராகவராவ்.

வீரராகவராவ்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் வழக்கம்போல திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட வீரராகவராவ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சி.முத்துமாரி, மக்கள் குறை தீர்க்கும் பிரிவு தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, சார் ஆட்சியர் (பயிற்சி) மணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்துக்கு அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். இவர்கள்  அனைவரிடமும் மனுக்களை நேரடியாகப் பெற்ற ஆட்சியர், அந்த மனுக்களின் மீது  உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரிடமும் அவர்கள் அமர்ந்து இருந்த இடத்துக்கே நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்று அதன் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தோம் என்ற விவர கையேடு ஒன்றை அனைத்து அதிகாரிகளும் கையில் வைத்திருக்க வேண்டும். அக்கையேடு இல்லாமல் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வரக்கூடாது என்றும் அதிகாரிகளை ஆட்சியர் கேட்டுக்கொண்டார். 
 
இதைத் தொடர்ந்து மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் இருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்  ஒவ்வொருவருக்கும்  உணவுப் பொட்டலங்களை வழங்கினார். ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த பொதுமக்களுக்கு ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தின் புதிய ஆட்சியரின் இந்த நடவடிக்கைகளால் மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்கள் நெகிழ்சியடைந்து சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!