``தந்தையின் தொகுதியில் நானே போட்டியிட்டால்..." -வியூகம் வகுக்கும் அழகிரி! | Azhagiri may contest in Tiruvarur bye-election

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (28/08/2018)

கடைசி தொடர்பு:17:00 (28/08/2018)

``தந்தையின் தொகுதியில் நானே போட்டியிட்டால்..." -வியூகம் வகுக்கும் அழகிரி!

தி.மு.க தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி.மு.க-வில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் அழகிரி , 'தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்கவில்லை என்றால் விளைவுகளை சந்திக்கத் தயாராக இருங்கள்' என்று தி.மு.கவு-க்கு எச்சரித்துள்ளார். தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் தவிர திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் எம்.எல்.ஏ-க்கள் பதவி காலியாக உள்ளது. விரைவில் இந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம்.

அழகிரி

தந்தை கருணாநிதியின் நிழலில் இருந்த ஸ்டாலின் தனியாக எதிர்கொள்ளப் போகும் முதல் தேர்தல் இது. கருணாநிதி உயிருடன் இருந்த போதே ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தினகரன் அமோக வெற்றி பெற்றதோடு எதிர்த்துப் போட்டியிட்டவர்களின் டெபாசிட்டை காலி செய்தார். திருவாரூரைப் பொறுத்தவரை, கருணாநிதி மீது அபிமானம் நிறைந்த மக்கள உள்ள தொகுதி. எனவே, இடைத் தேர்தலில்  நிச்சயம் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. அதனால் இந்த இடத்தில்தான் தி.மு.க புதிய தலைமைக்கு செக் வைக்க அழகிரி திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

தற்போதுள்ள சூழலில் அழகிரியை மீண்டும் தி.மு.க-வில்  சேர்த்துக்கொள்ள புதிய தலைமை விரும்பவில்லை. அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தால் கண்டிப்பாக கோஷ்டி பூசல் தலையெடுக்கத் தொடங்கும் என்றே தி.மு.க புதிய தலைமை கருதுகிறது. தி.மு.க-வில் சேர்க்கப்படாத பட்சத்தில் திருவாரூர் தொகுதியில் அழகிரி சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. 'கருணாநிதியின் மகன் ' என்கிற ஒரு சொல்லே தன்னை வெற்றி பெற வைக்கும் என்று நம்புவதாக அழகிரி நம்புவதாக மதுரை வட்டரங்கள் கூறுகின்றன.

திருவாரூர் தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க-வுடன் சேர்ந்து அழகிரியும் களமிறங்கும் பட்சத்தில் நிலைமை ஆர்.கே. நகர் போல மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் நடத்துவதே ஆணையத்துக்கு சவால் மிகுந்ததாக மாறி விடலாம். கருணாநிதி மறைந்ததால் திருவாரூரில் தேர்தல் நடத்தப்படுகிறது. கருணாநிதியின் மகனே தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் வாக்காளர்கள் தனக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அழகிரி நம்புவதோடு. திமுக தலைமையும் இறங்கி வரும் என்றும் கருதுகிறார். தி.மு.க தரப்பு இறங்கி வரவில்லையென்றால் தேர்தலில் களமிறங்கி ஒரு கை பார்த்து விடவும்  அவர் திட்டமிட்டுள்ளார். 

கடந்த 2014-ம் ஆண்டு அழகிரி மற்றும் ஆதரவாளர்கள் தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டனர். விளைவாக... அழகிரியும் அவரின் ஆதரவாளர்களும் உற்சாகம் இழந்திருந்தனர். அழகிரி தேர்தலில் போட்டியிடும் திட்டம் அவரின் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. `தேர்தல் நின்று நம்ம பலத்தைக் காட்டியே ஆக வேண்டும்' என்று அவருக்கு தூபம் போட்டு வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க