`வெளியே வந்தால் பல உண்மைகளைக் கூறுவேன்' - அதிரவைக்கும் உதவிப் பேராசிரியர் முருகன்

``என்னுடைய வாழ்க்கை சிறையிலேயே முடிவடைந்தால் ஆதாயமடைபவர்கள் யார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்" என்று உதவிப் பேராசிரியர் முருகன் இன்று நீதிமன்ற வளாகத்தில் மக்களையும் ஊடகங்களையும் பார்த்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகன்

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேராசிரியை நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி காவல் நீட்டிப்புக்காக இன்று விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

அப்போது போலீஸ் காவலுடன் நீதிமன்ற வளாகத்தில் நடந்து சென்ற உதவிப் பேராசிரியர் முருகன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், "ஒரு ஆரோக்கியமான விசாரணைக்கு என்னை அனுமதியுங்கள். வழக்கறிஞர் மூலம் வாதாடுவதற்கு எனக்கொரு வாய்ப்பு தாருங்கள். 127 நாள்களுக்கும் மேலாக என்னைச் சிறையில் அடைத்து வைத்திருந்து தற்கொலைக்கு முயற்சிக்குத் தள்ளாதீர்கள். தொடர்ச்சியாகச் சிறையில் வைத்திருப்பது என்னுடைய வாழ்வை இங்கேயே முடித்துக்கொள்வதற்கான திட்டம்போல இருக்கிறது. என்னோட வாழ்வை முடித்து விடுவதால் ஆதாயமடைபவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என் மீதான புகாரை நீதிமன்றத்தில் வாதாடுங்கள் நீதிமன்றம் தவறு என்று சொல்லட்டும். நீங்கள் யார், என்னைக் குற்றவாளி என்று கூறுவதற்கு..." என்று கூறிவிட்டுச் சென்றார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!