வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (28/08/2018)

கடைசி தொடர்பு:19:40 (28/08/2018)

ரூ. 80 கோடி மதிப்புள்ள சிலை கடத்தல் வழக்கு - இயக்குநர் வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்!

80 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலை கடத்தல் வழக்கில் மூன்றாண்டுக்களாகத் தலைமறைவாக இருந்தவரை போலீஸார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இயக்குநர் வி.சேகர் உட்பட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட  முஸ்தபா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள செளந்தரியபுரம் ஆதிகேசவ பெருமாள் கோயில், பையூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்கோவில், சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் ஆகிய கோயில்களில் கடந்த 2015-ம் ஆண்டு சிவன்- பார்வதி சிலை, ஆதிகேசவப் பெருமாள் சிலை, இரண்டு பூதேவி சிலைகள், இரண்டு ஸ்ரீதேவி சிலைகள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சிலை மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகிய எட்டு ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது. இந்த சிலைகளை, 2015-ம் ஆண்டு மே14-ம் தேதி, சென்னை மேற்கு மாம்பலத்தில் தனலிங்கம் என்பவர் டூ விலரில் கடத்திச் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  ஐ.ஜி-யாக இருக்கும் பொன்மாணிக்கவேல் பிடித்து சிலைகளைக் கைப்பற்றியதோடு தனலிங்கத்தை கைது செய்தார்.

மேலும், இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஏற்று விசாரணை நடத்தியதில் இந்தச் சிலை கடத்தல் வழக்கில் 15 பேர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகள் 12 பேரை போலீஸார் 2015-ல் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னை காவாங்கரை ஜெயக்குமாரை போலீஸார் கடந்த ஜூன் 20-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த செய்யாறு ஆற்காடு சாலை பாரிநகரைச் சேர்ந்த முஸ்தபா என்பவரை போலீஸார் செய்யாறுவில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு, நேற்று கைது செய்ததோடு இன்று கும்பகோணம் கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன் பிள்ளை வரும் செப்டம்ப 11-ம் தேதி வரை முஸ்தபாவுக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்திரவிட்டார். இதையடுத்து முஸ்தபா திருச்சி மத்திய சிறைக்குக் கொண்டு செல்லபட்டார்.

80 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் வி.சேகர், மாரிஸ்வரன், விஜயராகவன், ஜாய்சன் சாந்தகுமார், தமீம்பாஷா,  தனலிங்கம்,சண்முகம்,சுப்பிரமணியன் ஆகியோரும்  கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதில் ஜெயக்குமார் நீதிமன்றக் காவலில் உள்ளார். மற்றவர்கள் வழக்கில் ஆஜராகவில்லை. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 11-க்கு வழக்கை ஒத்திவைத்து உத்திரவிட்டார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 பேரில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு குற்றவாளியான சண்முகம் தேடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க