அறுந்து விழுந்த கன்வேயர் பெல்ட் - தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு! | In Thoothukudi thermal power plant, conveyor belt damaged

வெளியிடப்பட்ட நேரம்: 23:15 (28/08/2018)

கடைசி தொடர்பு:23:15 (28/08/2018)

அறுந்து விழுந்த கன்வேயர் பெல்ட் - தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் அறுந்து விழுந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அனல் மின்நிலையம்

தமிழகத்தின் நிலக்கரி அடிப்படையிலான பழைமையான அனல்மின் நிலையங்களி்ல் தூத்துக்குடி அனல்மின் நிலையமும் ஒன்று. இதில், 210 மொகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல்மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரி, கப்பல் மூலம் வ.உ.சி. துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள கரித்தளத்தில் இருந்து, கன்வேயர் பெல்ட் மூலமாக, அனல்மின் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதற்காக, துறைமுகத்திலிருந்து அனல்மின் நிலையத்துக்கு 4 கி.மீ., நீளத்துக்கு சுமார் 30 அடி உயரத்துக்கு கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது. 1-வது அலகு கொதிகலனுக்கு நிலக்கரி கொண்டுசெல்லும் கன்வேயர் பெல்ட்டைத் தாங்கி நிற்கும், இரும்புக் கோபுரங்கள் திடீரென அறுந்து, கன்வேயர் பெல்ட்டும் அறுந்து விழுந்தது. இதனால் மின் உற்பத்தி உடனே நிறுத்தப்பட்டது. இதில் கன்வேயர் பெல்ட்டுக்கு கீழே கொதிகலன்களைக் குளிர்விக்க கொண்டுசெல்லும் தண்ணீர் தொட்டி மீது, கன்வேயர் பெல்ட் அறுந்து விழுந்ததால், தண்ணீர் தொட்டியும் உடைந்தது.

ஏற்கெனவே, 5-வது அலகு பராமரிப்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு அலகுகள் இயங்காததால், 600 மெகாவாட் வரை மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 1-வது அலகில் கன்வேயர் பெல்ட் பகுதியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close