`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்’ - திருமுருகன் காந்தி ஆவேசம்! | We will not allow Sterlite to open the plant - Thirumurugan Gandhi in court

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (28/08/2018)

கடைசி தொடர்பு:20:40 (28/08/2018)

`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்’ - திருமுருகன் காந்தி ஆவேசம்!

``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’’ என மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார்.

திருமுருகன் காந்தி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் முதன்முதலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 18-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கிராமங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடந்த போராட்டத்தில் அனுமதியின்றி கலந்துகொண்டதாக மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் அவையில் பேசியதற்காகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்ட பிறகும், பல வழக்குகள் காரணமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சென்னை, நாகர்கோவில், சீர்காழி, தூத்துக்குடி ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குமரெட்டியாபுரம் கிராமத்தில் அனுமதியின்றி நுழைந்த வழக்கு தொடர்பாகத் தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் எண்: 3-ல் நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பாக இன்று நேரில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி மக்கள் பல நாள்கள் போராட்டம் நடத்தினர். இதன் முடிவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து 100 நாள்கள் ஆகிய நிலையிலும், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி மகேந்திரன் ஆகியோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் இன்னமும் கைது செய்யப் படாததற்குக் காரணம் என்ன?

சுதந்திர நாட்டில் தற்போது சுதந்திரம் நிலவவில்லை. போலீஸாரின் அடக்குமுறையே ஓங்கியுள்ளது. மோடி அரசு தொடர்ந்து மக்கள் விரோத அரசாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்க அனுமதிக்க மாட்டோம்” என்றார்.  நீதிமன்றத்துக்கு உள்ளே செல்லும்போதும் வெளியே வரும் போதும் ``ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீரவணக்கம்” என முழங்கினார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க