வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு! | Food safety officials investigated the hotels in Velankanni

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (28/08/2018)

கடைசி தொடர்பு:21:50 (28/08/2018)

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு!

வேளாங்கண்ணியில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், கடைகளிலும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்தனர்.

வேளாங்கண்ணி

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் பிரசித்தி பெற்ற புனித அன்னை ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நாளை (29.08.2018) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை முதல் 11 நாள்களுக்கு நடைபெறும் இந்தத் திருவிழாவில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல லட்சம் பேர் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வருகை தரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பான முறையில் உணவு கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நேற்று ஆய்வு செய்தனர்.

உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அந்தோணி பிரபு, அன்பழகன், மகாதேவன், ராஜன்சேகர், உமாகேசன், ஜேம்ஸ், ராஜேந்திரன் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி மீன் மார்க்கெட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன், ஆடு, கோழி இறைச்சி விற்பனை செய்யும் இடங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது நாள்பட்ட மீன்கள், இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றனவா எனவும் ஆய்வு செய்தனர். இந்தப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், டீக்கடைகள், இனிப்பு தயாரிக்கும் இடங்கள் மற்றும் சாலையோரம் விற்பனை செய்யப்படும் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ஹோட்டல்களில் உணவைக் கையாள்பவர்கள் சுத்தத்தைப் பராமரிப்பதோடு மருத்துவச் சான்று பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல்களில் கை கழுவும் இடங்களில் கட்டாயமாக சோப்பு வைத்திருக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட பலகாரங்கள் கண்ணாடி பெட்டிக்குள் மட்டுமே வைத்து விற்பனை செய்ய வேண்டும். இனிப்புகள் தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை மீறுவோர் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளனர்.

மேலும், அந்தப் பகுதிகளில் இருந்த பொதுமக்களிடம் உணவு விற்பனை தொடர்பான புகார்கள் குறித்து மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு நேரடியாகப் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.