வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (28/08/2018)

கடைசி தொடர்பு:21:30 (28/08/2018)

வங்கி அருகே 300 பவுன் நகை வழிப்பறி; கமுதியில் முகமூடிக் கொள்ளையர்கள் துணிகரம்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள வங்கி ஒன்றின் லாக்கரிலிருந்து எடுத்து வந்த 300 பவுன் நகையைப் பெண்ணிடம் இருந்து முகமூடிக் கொள்ளையர்கள் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமுதியில் 300 பவுன் நகை வழிப்பறி

கமுதி மேட்டுத்தெருவைச் சேர்ந்த குருவலிங்கம் மனைவி உமா. இவரின் சகோதரி சண்முகவடிவின் கணவர் பூபதிராஜா சென்னையில் சினிமா பைனான்சியராக இருந்து வருகிறார். இவர் தன் நகைகளைப் பாதுகாப்புக் கருதி கமுதி மருதுபாண்டியர் சிலை அமைந்துள்ள பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு  வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் (லாக்கர்) வைத்திருந்துள்ளார். இந்த நிலையில், இவரின் சகோதரி சண்முகவடிவின் மகனுக்கு நாளை அருப்புக்கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளது.

இதையடுத்து திருமண விழாவில் அணிந்துகொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை லாக்கரில் வைத்திருந்த 300 பவுன் நகைகளை உமா அங்கிருந்து எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் டூவீலரில் முகமூடி அணிந்து  வந்த மர்ம ஆசாமிகள், உமாவிடமிருந்த 300 பவுன் நகைகள் அடங்கிய பையை பறித்துக்கொண்டு தப்பினர். நகைப்பை பறிபோன அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத உமாவின்  அலறல் சத்தத்தைக் கேட்டவர்கள் நடந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர்  உமாவை தேற்றி கமுதி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உமா நகை பறிபோனது குறித்து கொடுத்த புகாரின்பேரில் கமுதி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வங்கியிலிருந்து உமா சென்ற பாதையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு நகை வழிப்பறிக் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் துணிகர வழிப்பறி சம்பவத்தால் கமுதி நகர மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கமுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.