வெளியிடப்பட்ட நேரம்: 00:15 (29/08/2018)

கடைசி தொடர்பு:00:15 (29/08/2018)

மின்சாரக் கட்டணம் செலுத்தாத கலெக்டர் அலுவலகத்தின் மின் இணைப்பைத் துண்டித்த மின்வாரியம்; கடலூரில் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் மின் கட்டணம் கட்டவில்லை என்பதால் சட்டம் எல்லோருக்கும் சமம் என  மின்சாரத்தை துண்டித்த மின்சார வாரிய அதிகாரிகளின் நடவடிக்கை கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கடலூர் செம்மண்டலம் பகுதியில் கடலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, கணக்குத்துறை, தமிழ்த்துறை, இ-சேவை மையம், சத்துணவுத்துறை, மாவட்ட வழங்கல் துறை, சுரங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7-க்கும் மேல் மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளுக்கு உரிய  மின் கட்டணம் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து கட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை ரூ.15 லட்சம் வரை மின்சார வாரியத்துக்கு பாக்கி இருந்துள்ளது. இது குறித்து மின்சார வாரியத்தில் இருந்து பல முறை  மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும் அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து மின் கட்டணம் செலுத்தாத மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் மின் இணைப்பைத் துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்ற மின்வாரிய ஊழியர்கள் ஒரு மின் இணைப்பை மட்டும் துண்டித்தனர். மாவட்டத்தின் இதயம் போன்ற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து இன்று காலை இரண்டாவது நாளாக மின் இணைப்பு இல்லாததால் கலெக்டர் அலுவலகத்தில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தளத்தில் இருந்த கம்பியூட்டர்கள் அனைத்திலும் பணி செய்ய முடியவில்லை. இதனால் ஊழியர்கள் பணி செய்ய முடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து இன்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து மின்சார வாரியத்துக்குப் பணம் செலுத்தப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை அளித்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகமாக இருந்தாலும் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்சாரத்தை துண்டிப்போம் என மின்சார வாரிய அதிகாரிகளின் நடவடிக்கை கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.