வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (29/08/2018)

கடைசி தொடர்பு:09:23 (29/08/2018)

`தி.மு.க, அதன் கொள்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது' - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

'தி.மு.க, தனது கொள்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது என தி.மு.க தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவால் கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வில் கட்சித்தலைவர் பதவி காலியானது. தி.மு.க-வில் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல், கடந்த  26-ம் தேதி நடைபெற்றது.  இதில், தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்புமனு தாக்கல்செய்தனர். மேற்கண்ட பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல்செய்ய முன்வராததால், தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதேபோல, பொருளாளராக துரைமுருகன் தேர்ந்தேடுக்கப்பட்டார். இதையடுத்து, மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், தி.மு.க தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், `'தி.மு.க. தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் ஆதரவுக்கு மகிழ்ச்சி. தி.மு.க., அதன் முக்கியக் கொள்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது. எப்போதும் அதன் கடமைகளை நிறைவேற்றும்'' என்று பதிவிட்டுள்ளார்.