அ.தி.மு.க-வில் உச்சகட்ட மோதல்... சசிகலா- தினகரனுக்கு கிரீன் சிக்னலா? | Fight for throne begins in ADMK.

வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (29/08/2018)

கடைசி தொடர்பு:15:37 (29/08/2018)

அ.தி.மு.க-வில் உச்சகட்ட மோதல்... சசிகலா- தினகரனுக்கு கிரீன் சிக்னலா?

அ.தி.மு.க-வில் உச்சகட்ட மோதல்... சசிகலா- தினகரனுக்கு கிரீன் சிக்னலா?

அ.தி.மு.க-வில் உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது. கட்சியின் அவைத் தலைவரான மதுசூதனன், மூத்த அமைச்சரான ஜெயக்குமார் ஆகியோருக்கு இடையிலான உட்கட்சி விவகாரம், கட்சியில் பிளவை உண்டாக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. முன்னதாக துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று மதுசூதனன் சந்தித்து தன்னுடைய ஆதங்கத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ஓ.பி.எஸ்., ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மற்ற நிர்வாகிகளையும் மதுசூதனன் சந்தித்து, தன்னுடைய மனக் குமுறலைக் கொட்டி விட்டார். நேற்றைய குமுறலின் தொடர்ச்சியாக `இன்று பிற்பகல் செய்தியாளர்களை மதுசூதனன் சந்திக்கிறார்' என்று தகவல் வெளியானது. கட்சி நிர்வாகிகளிடம் மதுசூதனன் என்னதான் சொன்னார் என்று பலதரப்பிலும் கேட்டோம். 

நம்மிடம் பேசிய அனைவருமே, ``கட்சியைத் தொடங்குறதுக்கு முன்னால தலைவரோட ரசிகர் மன்றத்துல இருந்து அடி-உதை பட்டு மேலே வந்தவன்யா, நானு... இன்னைக்கு இந்தக் கட்சியில அடிமட்டத் தொண்டன் ஒருத்தனுக்குக் கூட என்னால எந்த உதவியையும் செய்ய முடியல. எதைச் செஞ்சாலும், கட்சிக்கு நேத்து வந்தவன்லாம் நடுவுல `கேட்' டை போடுறானுங்க. கண்ணுக்கு எதிரேயே கட்சி அழியுறதைப் பாக்க என்னால முடியலே. சசிகலாவை நான்தான், `கட்சிக்குப் பொதுச் செயலாளரா வாங்கம்மா' ன்னு கூப்பிட்டேன். அம்மாவால ரெண்டு தடவை சி.எம். சீட்ல உட்கார வைக்கப்பட்ட, அண்ணன் ஓ.பி.எஸ்ஸை, தினகரன் - சசிகலா ஆட்கள், அந்த சீட்டிலிருந்து காலி பண்ணியதைத் தாங்க முடியாமத்தான், நான் ஓ.பி.எஸ் அண்ணனை ஆதரிச்சேன். திடீர்னு அவங்க எடப்பாடி பழனிசாமியை சி.எம். ஆக்குனாங்க. கடைசியில அவரும், சசிகலா-தினகரன் குரூப்பை எதிர்த்தாரு. ஈ.பி.எஸ் எடுத்த நிலைப்பாட்டால் அவரைக் கைத்தூக்கி விட்டுக் கட்சியக் காப்பாத்த நினைச்சேன். கடைசியில், ஓ.பி.எஸ்., அணின்னு, என்னையும், ஓ.பி.எஸ்.ஸையும் ஒதுக்கி வெச்சுட்டு, கட்சியைத் தனியாகக் கொண்டு போகலாம்னு ஈ.பி.எஸ். தரப்பு முடிவு பண்ணினா, நான் எப்படிய்யா சும்மா இருப்பேன். அம்மா இருக்கும்போது, அவைத் தலைவருக்கு உண்டான மரியாதை எனக்குக் கிடைச்சுது. இப்ப என்னை அப்படியா வெச்சிருக்கானுங்க. அவைத் தலைவருக்கு என்ன உரிமை இருக்குன்னு எனக்குத் தெரியாதா?" என்றுதான் மதுசூதனன் திரும்பத் திரும்பக் கேட்கிறார் என்றனர். 

அதிமுக

அதேபோல், ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசிய மதுசூதனன், ``கட்சியில் உங்கள் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவமே இல்லை. உட்கட்சிப் பதவி, சொசைட்டி தேர்தல் போன்ற சின்னச் சின்ன விவகாரங்களில் கூட நாம் புறக்கணிக்கப்படுவதை உங்கள் கவனத்துக்குப் பலமுறை  கொண்டு வந்தும், பலன் இல்லை. இதே நிலைமை நீடித்தால் உள்ளாட்சித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்களில் ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என்று அணி, அணியாகப் பார்த்துதான் கட்சியில் சீட் ஒதுக்கும் நிலைமை உண்டாகும். வடசென்னை மாவட்டம், ஆர்.கே.நகர்த் தொகுதியில் நடக்கவிருந்த கூட்டுறவு சொசைட்டித் தேர்தலில், தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத அமைச்சர் ஜெயக்குமார் தரப்பிலிருந்து போட்டி மனுத்தாக்கல் செய்கிறார்கள். நான் தலையிட்டு, அது முறைகேடு என்று சொன்ன பிறகுதான் சொசைட்டி தேர்தல் ரத்து ஆகிறது. இப்படி எல்லா இடத்திலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் நுழைந்து கலகம் செய்தால், கட்சியின் நிலைமை என்னாவது?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகக் கருதப்படும், அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள், ``மதுசூதனனும், அவர் ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷூம், நேரில் வந்து தேர்தலை நிறுத்தச் சொன்னதால் தேர்தல் அதிகாரியும், மீன்வளத்துறை உதவி இயக்குநருமான இரா.ரவிச்சந்திரன், தேர்தலை நிறுத்துவதாகக் குறிப்பிட்டு ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனருக்குக் கடிதமும் அனுப்பியுள்ளார். `மதுசூதனன் ஆதரவாளர்களால், சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படும்' என்றும் அந்தக் கடிதத்தில் சொல்லி இருக்கிறார்" என்றனர். போலீஸ் தரப்பில் கேட்டோம். ``சட்டம் -ஒழுங்குப் பிரச்னை வந்து விடாமல் இருக்க, மனுத்தாக்கல் பணியை நிறுத்துங்கள் என்றுதான் மதுசூதனன் சொன்னதாகத் தேர்தல் அதிகாரி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்" என்றனர். 

``தகுதி உள்ள அனைவரும் சொசைட்டித் தேர்தலில் மனுத்தாக்கல் செய்யட்டும், வேட்புமனு பரிசீலனைக்குப் பின்னர் போட்டி இருந்தால் 1.9.2018 அன்று அதற்கான தேர்தலை நடத்தலாம்... என்று, தேர்தல் அதிகாரி சொல்வதே முரண். ஆர்.கே.நகர்த் தொகுதியில் இருப்பவர்களை ஓரங்கட்டி விட்டு, ராயபுரம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் மனுத்தாக்கல் செய்ய அனுமதி கொடுக்கும் வேலைதான் இது. சொசைட்டித் தேர்தல் பாதுகாப்புக்கு வந்த போலீஸாரே, ஓ.பி.எஸ். ஆட்கள் என்றால், தடுத்து நிறுத்தினர், ஈ.பி.எஸ்., ஆட்கள் என்றால், உள்ளே அனுப்பி வைத்தனர். அதேபோன்று தொகுதியைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன் ஆதரவு ஆட்கள், சொசைட்டித் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தபோது, அவர்களை போலீஸார் தடுக்கவில்லை. நடப்பது கட்சிதானா, அல்லது நாடக கம்பெனியா என்ற கேள்விதான் எழுகிறது. போலீஸாரின் அத்துமீறலைப் படம் பிடிக்கவோ, வீடியோ பதிவு செய்யவோ முடியாமல், உள்ளூர்ப் பத்திரிகையாளர்கள் விரட்டப் பட்டனர். ஓ.பி.எஸ். தரப்புச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல்லி, உள்ளூர் செய்தியாளர்கள் சிலர் மீது அடுத்தடுத்த நாள்களில் போலீஸார் எஃப்.ஐ.ஆரே போட்டுள்ளனர். `காவல் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் செயல்பட்டனர்' என்று அந்த எஃப்.ஐ.ஆரில் காட்டியுள்ளனர். சசிகலாவும், தினகரனும், அண்ணன் (மதுசூதனன்) மீது எப்போதும் போலவே அதே அன்புடன்தான் இருக்கிறார்கள், கட்சியின் அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனன் நினைத்தால் இப்போது எதையும் செய்யமுடியும். தேர்தல் ஆணையமே அண்ணனை முன்னிறுத்திதான் கட்சியைக் கையில் கொடுத்திருக்கிறது. டி.டி.வி. ஆட்கள், அண்ணனைக் கொத்திக் கொண்டு போகக் காத்திருக்கிறார்கள். எல்லா விஷயமும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவருக்கும் தெரியும். மீண்டும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது சமாதானம் பேசுவதால் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களின் நிலைமை பரிதாபமாகிக் கொண்டிருக்கிறது... இதுதான் கடைசி சமாதானப் பேச்சு வார்த்தையாக இருக்கப் போகிறது" என்றனர்.

 

 


டிரெண்டிங் @ விகடன்