பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிய கூலிப்படையினர்... பிடித்துக்கொடுத்த பொதுமக்கள்... தப்பிய வியாபாரி!

வியாபாரியை கொல்ல முயன்ற கூலிப்படையினர்

திருப்பூரில், பயங்கர ஆயுதங்களுடன் இளநீர் வியாபாரியைக் கொல்ல முயன்ற கூலிப்படையினர் 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பாக இளநீர் கடை நடத்திவருகிறார், இளையபாரதி. இவருக்கும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையின் அருகே தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்துவரும் முருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகன், இளையபாரதியைப் பழிவாங்க நினைத்திருக்கிறார். அதற்காக, கூலிப்படையை வைத்து இளையபாரதியைக் கொல்ல திட்டமிட்டார். இதற்காக, கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர், இளையபாரதியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், கூலிப்படையினர் பயங்கர ஆயுதங்களுடன் இருந்ததைப் பார்த்து, அருகில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடிக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர், பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியவர்களில் 2 பேரை சம்பவ இடத்திலும், தப்பியோடிய 3 பேரை எம்.எஸ் நகர் என்ற பகுதியிலும் வைத்து மடக்கிப் பிடித்தனர். பின்னர் முருகன், காளிமுத்து, இம்ரான், ஜெய்கணேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரைக் கைதுசெய்து நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். 

திருப்பூரின் முக்கியப் பகுதியில் ஆயுதங்களுடன் கூலிப்படையினர் கொலைசெய்ய முயன்ற சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!