வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (29/08/2018)

கடைசி தொடர்பு:11:45 (29/08/2018)

வெள்ளத்தினால் தீவுபோல மாறிய கிராமம்... வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள்!

சிதம்பரம் அருகே உள்ள அக்கரைஜெயங்கொண்டப்பட்டினம், கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகிய கிராமங்கள், பழைய கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்கு இடையே இருபுறமும்  நீர் சூழ்ந்து, கிராமம் தீவுபோல  உள்ளது.

வெள்ளத்தால் பாதித்த பயிர்கள்

இந்தக் கிராம மக்கள் முருங்கை, கத்திரிக்காய், வெண்டை, பாகற்காய், அரும்பு, முல்லை போன்ற தோட்டப் பயிர்களை அதிக அளவில் பயிர்செய்துவருகின்றனர். இவற்றை சிதம்பரம் காய்கறி மார்க்கெட்டிலும், பூக்களை பூக்கடைகளிலும் விற்பனைசெய்துவருவது வழக்கம். இதனால் இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.300 முதல் 500 ரூபாய் வரை வருமானம் கிடைத்துவந்தது. இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், மேற்கண்ட 3 கிராமங்களும் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. ஒரு வாரம் வரை கிராமம் முழுவதும் தண்ணீரில் மிதந்தது.

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிராமம்

இதனால், பல வீடுகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. வயல்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. தொடர்ந்து 10 நாள்களுக்கு மேல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்ததால்,தோட்டப் பயிர்களான முருங்கை, கத்திரிக்காய், மரவள்ளி, வெண்டை, அரும்பு, முல்லை உட்பட,  அனைத்தும் அழுகிச் சேதமடைந்துள்ளன. இதனால், இந்தக் கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளதால் தங்களின் வீடு, வயல்கள் என அனைத்தையும் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு,  அரசு  உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.