வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (29/08/2018)

கடைசி தொடர்பு:13:10 (29/08/2018)

தெருவில் கிடந்த பணம், நகையை உரியவரிடம் ஒப்படைத்த சலவைத் தொழிலாளி!

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் பாரதி தெருவில், கீழே கிடந்த பையை எடுத்து, அதில் 20 சவரன் நகையும் 35 ஆயிரம் பணமும் இருப்பது தெரிந்தும், கண்ணியமாக அதை உடையவர்களிடம் ஒப்படைத்தார் சலவைத் தொழிலாளி பிரகாஷ்.

பிரகாஷ்

மயிலாடுதுறை  டு  கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், குத்தாலம் பேருந்து நிலையத்துக்கு முன்பு இருக்கும் பாரதி தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். 20 வருடங்களுக்கும் மேலாக சலவைத் தொழில் செய்துவருகிறார். இவருக்கு, சத்யா என்ற மனைவியும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். கடந்த புதன்கிழமை காலை தொழிலுக்குச் சென்று திரும்பும்போது , குத்தாலம் பாரதி தெருவில் கீழே ஒரு பை கிடப்பதைப் பார்த்த பிரகாஷ், அதை எடுத்தார். அதில் 20 சவரன் நகையும் 35 ஆயிரம் பணமும் இருந்தது. அதை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார் பிரகாஷ்.  

இதுகுறித்துப் பேசிய பிரகாஷ், "புதன்கிழமை காலைல 8 மணி இருக்கும், வேலைக்குப் போயிட்டு வர்றப்போ, புதுநகர் முனைல கீழ ஒரு பை கிடந்துச்சு. எடுத்து தெறந்து பார்த்தப்போ, அதுல 20 சவரன் நகையும் , 35 ஆயிரம் பணமும், ஒரு செல்போனும் இருந்துச்சு. என்ன பண்றது ஏது பண்றதுனு தெரியாம அடிச்சுப்புடிச்சு பைய எடுத்துட்டு தெருல உள்ளவர்களிடம் ஓடி வந்து , பையோட சொந்தக்காரங்ககிட்ட பையை ஒப்படைக்கணும்னு சொன்னேன்.

பாரதி தெரு

அப்போ, அந்த செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியவர், தெரெழுந்தூரைச் சேர்ந்த நடராஜன் என்று கூறினார். தொலைந்தது என்னுடைய பை என்று கூறினார். அவர் அடையாளம் சொன்ன நடராஜனிடம் நகையையும் பணத்தையும் ஒப்படைத்தோம்" என்று கூறினார். 

கீழே கிடந்த பணத்தையும் நகையையும் உரியவரிடம் ஒப்படைத்த பிரகாஷை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.