தமிழகத்தின் பெருமை பேசும் மோடி: வாக்கு வங்கியாக மாறுமா? | PM Modi's affection to Tamil culture will increase vote bank in Tamilnadu?

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (29/08/2018)

கடைசி தொடர்பு:14:30 (29/08/2018)

தமிழகத்தின் பெருமை பேசும் மோடி: வாக்கு வங்கியாக மாறுமா?

தமிழகத்தின் பெருமை பேசும் மோடி: வாக்கு வங்கியாக மாறுமா?

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் அகில இந்திய வானொலியில் `மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் தமது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ஆகஸ்ட் 26-ம் தேதி பிரதமர் ஆற்றிய வானொலி உரையில், ``உலகின் தொன்மையான மொழிகளில் தமிழ் முதன்மையானது" என்பது குறித்து இந்தியா பெருமையடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

நாடு முழுவதும் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும், தூர்தர்ஷன் அலைவரிசைகளிலும் பிரதமர் மோடியின் மனதின் குரல் உரை இடம்பெற்றது. தவிர, பிரதமர் அலுவலகம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அனைத்து யூ-ட்யூப் சேனல்களிலும் பிரதமர் ஆற்றிய உரை இடம்பெற்றது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 26-ம் தேதி அன்று சம்ஸ்கிருத மொழி நாள் அனுசரிக்கப்பட்டதையொட்டி, தமிழ்மொழியின் தொன்மை குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டிப் பேசினார். ``ஒவ்வொரு மொழியும் அதற்கே உரிய சொந்தச் சிறப்புகளையும், புனிதத்தையும் கொண்டுள்ளது. உலகின் தொன்மையான மொழிகளில் தமிழ் முதன்மையானது என்பதில் இந்தியா உண்மையிலேயே பெருமைக் கொள்கிறது. இதேபோல், வேதகாலத்தில் இருந்து நவீன காலம் வரையில் உலக அளவில் அறிவை விசாலம் பெறச் செய்ததில் சம்ஸ்கிருத மொழி முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது குறித்தும் இந்தியா பெருமையடைகிறது. அனைத்துத் துறைகளிலும் சம்ஸ்கிருதத்துக்குத் தொடர்பிருக்கிறது" என்றார் பிரதமர் மோடி.

அண்மைக்காலமாக, தமிழில் `வணக்கம்' தெரிவிப்பது, `நன்றி' உள்ளிட்ட ஓரிரு வார்த்தைகளை அவ்வப்போது தமிழில் பேசி, மக்களைக் கவர்வார். அண்மையில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, மகாகவி பாரதியாரின் வரிகளை மேற்கோள்காட்டினார். பாரதியாரின் `பாரத சமுதாயம் வாழ்கவே' என்று தொடங்கும் பாடலில் உள்ள, `எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்’ என்ற வரிகளை மோடி எடுத்துரைத்துப் பேசினார். 

மோடி மனதின் குரல் உரை

இந்நிலையில், `மனதின் குரல்' நிகழ்ச்சியில், கேரள வெள்ள பாதிப்பு, அதில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நிவாரண நடவடிக்கைகள், முன்னாள் பிரதமர் வாஜ்பாயி-யின் மரணம், நாட்டு மக்கள் போற்றும் தலைவராக அவர் திகழ்ந்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி பேசினார். அப்போது, தமிழ் மொழியின் தொன்மையையும் புகழ்ந்துரைக்க அவர் தவறவில்லை. மேலும், தஞ்சை பெரிய கோயிலின் கட்டடக் கலையின் பாரம்பர்யம் குறித்தும் மோடி பெருமிதத்துடன் தமது உரையில் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி சமீப காலமாக தமிழ்மொழி குறித்தும், தமிழகத்தின் பெருமைகள் பற்றியும் தொடர்ந்து தமது பேச்சில் குறிப்பிட்டு வருவது பற்றி அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.

``நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருபுறம் வேகமாக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் சூழலில், பி.ஜே.பி-யும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களிலும் பிரசாரத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அதன் ஒருகட்டமாகவே பிரதமரின் தமிழ் மொழி குறித்த பாராட்டுரையைப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இரு முக்கியத் தலைவர்கள் மரணமடைந்துள்ள நிலையில், அ.தி.மு.க. இரு அணிகளாகச் செயல்படுகிறது. டி.டி.வி. தினகரன் செல்லும் கூட்டங்களுக்கு ஏராளமான மக்கள் திரண்டுவருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஒற்றுமையோடு இருக்கிறது என்று சொல்லிக் கொண்டாலும், அவர்கள் இருவரின் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் இன்னமும் பிரிந்தே செயல்படுகிறார்கள். 

தி.மு.க-விலும், மு.க. அழகிரி ஒருபுறம், மு.க.ஸ்டாலினுக்குப் போட்டியாக, செப்டம்பர் 5-ம் தேதி, கருணாநிதி சமாதி நோக்கி அமைதிப் பேரணி நடத்தவுள்ளதால், தி.மு.க-விலும் பூசல் நீடித்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் பி.ஜே.பி-க்கான இடத்தைப் பிடித்து விடலாம் என்பதே அந்தக் கட்சி மேலிடத்தின் கனவாக உள்ளது. ஆனால், பி.ஜே.பி. நினைப்பது, தமிழ்நாட்டில் சாத்தியப்படுமா என்பது, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும்" என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தமிழகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டும் பிரதமரின் இதுபோன்ற உரைகள், தமிழகத்தில் எந்தளவுக்கு பி.ஜே.பி-க்கு வாக்குகளாக மாறும் என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே தெரியவரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்