`உன்னை மகனாகத்தான் கருதினேன்; ஆனால் நீ...' - கதறிய சிறுமியின் அம்மா!

 சிறுமியின் அம்மா கொடுத்த புகாரில் கைதான ராஜசேகர்

`உன்னை மகனாகத்தான் கருதினேன், ஆனால் நீ, என் மகள் வாழ்க்கையை நாசமாக்கிட்டியே' என்று கைதுசெய்யப்பட்ட ராஜசேகரைப் பார்த்து சிறுமியின் அம்மா ஆவேசமாகக் கூறினார்.

சென்னையை அடுத்த புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (மாற்றம்). இவரின் மகள் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துவருகிறார். மாரியம்மாள், வீட்டு வேலை செய்கிறார். அவரின் கணவர், அந்தப் பகுதியில் உள்ள புதிதாகக் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றுகிறார்.  மாரியம்மாளின் கணவர் வேலைபார்க்கும் இடத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர்  எலெக்ட்ரீஷியனாக வேலைபார்த்தார். இதனால் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. ராஜசேகர், கொரட்டூரில் தங்கியிருந்தார். 26 வயதாகும் அவருக்கு, இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில், அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்க அடுக்குமாடி குடியிருப்புக்கு அடிக்கடி சென்றுள்ளார் அந்தச் சிறுமி. அப்போது ராஜசேகருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியாது, 

சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்குச் சென்றுள்ளார் ராஜசேகர். இருவரும் நெருங்கிப் பழகினர். இதில், சிறுமி கர்ப்பம் அடைந்தார். ஆனால், அந்தத் தகவலை பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. 5 மாதங்கள் கடந்ததால், அவரின் உடலில் மாற்றம் தெரிந்தது. அதைக் கவனித்த மாரியம்மாள், மகளிடம் விசாரித்தார். முதலில் எந்தத் தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, கர்ப்பமாக இருக்கும் தகவலை சிறுமி தெரிவித்தார்.

அதைக் கேட்ட மாரியம்மாள், அவரின் கணவர் அதிர்ச்சியடைந்தனர். மகளின் கர்ப்பத்துக்கு ராஜசேகர்தான் காரணம் என்ற தகவலைக் கேட்டு  மாரியம்மாளும் அவரின் கணவரும் ஆத்திரமடைந்தனர். `மகன் போலதான் அவனைக் கருதினோம். ஆனால், அவன் என் மகளின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டானே' என்று இருவரும் கதறினர். இதையடுத்து மாரியம்மாள், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நித்யகுமாரி, ராஜசேகரிடம்  விசாரித்தார். அப்போது, சிறுமியின் கர்ப்பத்துக்கு ராஜசேகர்தான் காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ராஜசேகரை போலீஸார் கைதுசெய்தனர். 

பாதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பாலியல் தொல்லை குறித்து எவ்வளவோ விழிப்பு உணர்வு ஏற்படுத்தினாலும் போக்சோ சட்டம் இயற்றப்பட்டாலும்,  அபலைச் சிறுமிகள், பெண்கள், மாணவிகள் பாதிக்கப்படுவது வேதனைக்குரியதாக உள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!