`ரூ.4 ஆயிரத்துக்கு வாங்கினால் ரூ.10 ஆயிரம் கிடைக்கும்!' -  மாணவர்கள் மட்டுமே கும்பலுக்கு இலக்கு

கஞ்சா விற்றவர்கள்

சென்னையில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் குறிப்பிட்ட குடியிருப்புகளில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்துவருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் 7 பேர் பிடிபட்டனர். 

சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரிகள், பள்ளிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளி பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது புஹாரி தலைமையிலான போலீஸார், கஞ்சா விற்பனையை ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது போலீஸாருக்கு முக்கியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கஞ்சா கும்பலைப் பொறி வைத்துப் பிடிக்க போலீஸார் வியூகம் அமைத்தனர். போலீஸாரின் வலையில் ஏழு பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தி 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருவொற்றியூர், சென்ட்ரல், தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் இன்னும் சில குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. கஞ்சா விற்பவர்களைப் பிடிக்க திட்டமிட்டோம். கல்லூரி மாணவர் போல ஒருவரை ஏற்பாடு செய்து கஞ்சா வாங்க வைத்தோம். கஞ்சா விற்கும் கும்பலும் அவரிடம் கஞ்சா கொடுத்தனர். மறைந்திருந்த நாங்கள் கஞ்சா விற்றவரை கையும் களவுமாகப் பிடித்தோம். அவரிடம் விசாரித்தபோது கஞ்சா விற்பனையில் இன்னும் சிலர் இருப்பது தெரியவந்தது. அவர்களையும் பிடித்தோம். 

விசாரணையில், கஞ்சா விற்றவர்கள் எர்ணாவூரைச் சேர்ந்த சத்யா, ராஜ்குமார், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வேலு, செல்வராஜ், காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவி என்கிற பவுடர் ரவி, ராயபுரத்தைச் சேர்ந்த குமார், பூந்தமல்லியைச் சேர்ந்த சுரேஷ் எனத் தெரியவந்தது. இதில் காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவி, தொடர்ந்து கஞ்சா விற்பதால் அவரின் பெயருடன் அடைமொழியாக பவுடர் என்ற வார்த்தையும் சேர்ந்துகொண்டது. இவர்கள் அனைவரும் ஆந்திராவிலிருந்து ஒரு கிலோ கஞ்சாவை 3,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய்க்கு வாங்கி ரயிலில் கொண்டு வருகிறார்கள். பிறகு அதைச் சிறிய, சிறிய பொட்டலமாக போட்டு மாணவர்களுக்கு சப்ளை செய்கின்றனர். அவ்வாறு விற்கும்போது ஒரு கிலோவுக்கு 6,000 ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது. இதன்மூலம் கஞ்சா விலை ஒரு கிலோ 10,000 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. பிடிபட்டவர்களை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!