`சும்மா இருந்தால் பிணத்துக்குச் சமம்!’- மக்கள் நல இயக்கம் தொடங்கிய விஷால்

``மக்கள் பிரச்னைகளை நேரில் சந்தித்து தீர்த்து வைப்பதே உண்மையான சந்தோஷம்'' என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

விஷால்

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் தனது ரசிகர் மன்றத்தின் பெயரை `மக்கள் நல இயக்கம்' என்று பெயர் மாற்றப்படுவதாக நடிகர் விஷால் அறிவித்தார். `அணி சேர்வோம், அன்பை விதைப்போம்’ என்ற வாசகத்துடன் கூடிய கொடியையும் இந்தக் கூட்டத்தில் விஷால் அறிமுகப்படுத்தினார். 

விழாவில் பேசிய அவர், ``கார் மட்டுமே எனக்குச் சொந்தமாக உள்ளது. எனக்குச் சொந்த வீடு கிடையாது. என்னை குஷிப்படுத்தும் எந்தவொரு நண்பரும் எனக்கு வேண்டாம். மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதே அரசியலாகும். நான் வணங்கும் இரண்டு தெய்வங்கள் அன்னை தெரசா, அப்துல்கலாம். அப்துல் கலாமை பார்க்கும்போது அறிவு ஞாபகம் வரும். அன்னை தெரசாவைப் பார்க்கும்போது அன்பு நினைவுக்கு வரும்.

வீதியில் நடக்கும் பிரச்னையைப் பார்த்து கேள்விகேட்காவிட்டால் பிணத்துக்குச் சமம். நம் நாட்டில் கொத்தடிமைகள் இன்னும் உள்ளார்கள். சோதனைகளைத் தாண்டி சாதனைகள் செய்யும்போது சந்தோஷம் ஏற்படும். என்னுடைய சந்தோஷத்தையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளவே வேண்டும். அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் இடமாக மாறிவிட்டது. நடிகனாக சம்பாதித்துவிட்டு குடும்பத்துடன் இருக்க முடியாது. நிஐ வாழ்க்கையில் மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகளே. அரசியல் என்பது மக்கள் பிரச்னையைத் தீர்ப்பதுதான். எனக்குச் சொந்தமாக இருப்பதெல்லாம் ரசிகர்களாகிய நீங்கள்தான். அதனால்தான் `அணி சேர்வோம், அன்பை விதைப்போம்’ என்ற வாசகம் கொடியில் இடம் பெற்றுள்ளது’’ என்று பேசினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!