`நான் கழிவறை கட்டியது தவறா?' - தற்கொலைக்கு முன் நர்ஸ் வாக்குமூலம் | Chennai Tiruverkadu police inspector placed in waiting list after Woman's suicide

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (29/08/2018)

கடைசி தொடர்பு:17:30 (29/08/2018)

`நான் கழிவறை கட்டியது தவறா?' - தற்கொலைக்கு முன் நர்ஸ் வாக்குமூலம்

 தற்கொலை செய்துக் கொண்ட நர்ஸ் ரேணுகா

சென்னை திருவேற்காடு போலீஸ் நிலையம் முன்பு நர்ஸ் தீக்குளித்த சம்பவத்தில் அதிரடியாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

சென்னை திருவேற்காடு கோலடி, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரின் மனைவி ரேணுகா. செவிலியரான இவர் தனது வீட்டின் அருகே கழிவறை கட்டி வந்தார். இதனால் அவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அமிர்தவள்ளிக்கும் ரேணுகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அமிர்தவள்ளி திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இரு தரப்பினரையும் போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் அ.தி.மு.க பிரமுகர்கள் சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அமிர்தவள்ளிக்கு ஆதரவாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ரேணுகா மனம் உடைந்தார். உடனே அவர்,  மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு காவல் நிலையத்திலேயே தீவைத்துக்கொண்டார். இதையடுத்து  அவரை மீட்டு  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரேணுகா இறந்தார்.  இந்த நிலையில், போலீஸார் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசுவதால்தான் தான் தற்கொலை செய்துகொண்டதாக இறப்பதற்கு முன் அவரது உரையாடல் வெளியாகியுள்ளது. இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நர்ஸ் ரேணுகா இறப்பதற்கு முன், நடந்த சம்பவத்தை முழுமையாகப் பதிவு செய்துள்ளார். அந்த வாக்குமூலம் அடிப்படையில்தான் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. பிரமுகர்களின் சிபாரிசு, லஞ்சம் காரணமாகத்தான் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். முழுமையாக இந்தச் சம்பவத்தை விசாரித்தால் அ.தி.மு.க. பிரமுகர்கள் சிக்குவார்கள்" என்றனர். 

தற்கொலைக்கு முன் நர்ஸ் பேசிய ஆடியோவில் நான் கழிவறைக் கட்டியது தவறா என்று மனம் உடைந்து கண்ணீர்மல்க கூறியுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும், போலீஸ் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் ரேணுகாவை சிலர் மிரட்டியுள்ளனர். இதனால்தான் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.