11 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய நபர் பிடிபட்டார்! | Man arrested in Nellai over mislead police

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (29/08/2018)

கடைசி தொடர்பு:19:30 (29/08/2018)

11 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய நபர் பிடிபட்டார்!

நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனியார் வங்கியின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் இருந்த 11 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக நாடகமாடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

கொள்ளை போனதாக நாடகம்

நெல்லை டவுன் ஜாமியா தைக்கா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன். அவரும் அவரது உறவினர்கள் 3 பேரும் சேர்ந்து குற்றாலம் சாலையில் உள்ள இண்டெல் மணி பேங்க் என்ற தனியார் வங்கியில் நகைக்கடனாக ரூ.15 லட்சம் கடன் பெற்றுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் பெற்றிருந்த நிலையில், அவர்களின் நகையை ஆய்வு செய்தபோது, அது போலி என்பது தெரியவந்தது. 

அதனால் வங்கி நிர்வாகத்தினர் முகமது அசாருதீனைத் தொடர்புகொண்டு, நகைகள் போலியானது எனத் தெரியவந்திருப்பதால் உடனடியாக உரிய பணத்தைச் செலுத்தி நகையை திருப்பி வாங்கிச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர். அதனால் இன்று காலை இருசக்கரவாகனத்தில் வங்கிக்கு வந்த முகமது அசாருதீன், வங்கியின் முன்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு தனியார் வங்கியின் உள்ளே சென்றுள்ளார். 

பின்னர் வெளியே வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தைக் காணவில்லை என்றும் அதில், நகையைத் திருப்பிச் செல்வதற்காக 11 லட்சம் ரூபாய் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். அதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக டவுன் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருசக்கர வாகனத்துடன் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார்கள். 

தனியார் வங்கி நிர்வாகத்தினரிடம் விசாரித்தபோது, முகமது அசாருதீன் போலி நகைகளை அடமானம் வைத்து வங்கியில் 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றது தெரியவந்தது. அதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீஸார், வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை  ஆய்வு செய்தார்கள். அப்போது முகமது அசாருதீன் இரு சக்கர வாகனத்தில் வராமல் நடந்து வருவது பதிவாகி இருந்தது. அதனால் குற்றப்பிரிவு காவல்துறையினர் முறைப்படி அவரை விசாரித்தபோது, போலி நகைகளை அடமானம் வைத்ததையும், வாகனத்துடன் 11 லட்சம் ரூபாய் பறிபோனதாக நாடகமாடியதையும் ஒப்புக்கொண்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.