``எளிமையான வாழ்க்கை வாழுங்கள்!” - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை

ஆளுநர்

``நம்மைக் கடவுள் கண்காணிக்கிறார் எனத் தெரிந்தால்தான் மனிதன் தவறு செய்வதை நிறுத்துவான்” என ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி லட்சுமண அய்யரின் சிலை திறப்பு விழா, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் உள்ள டி.எஸ்.ராமன் & சரோஜினிதேவி விடுதி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்தார். மேலும், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் மற்றும் அகில இந்திய ஹரிஜன் சேவக் சங்கத் தலைவர் சங்கர் குமார் சன்யால் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.

ஆளுநர்

நிகழ்ச்சியின்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில், ``லட்சுமண அய்யர் காந்திய கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தன்னுடைய மனைவியுடன் சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், தீண்டாமை, பெண்கல்வி போன்ற பிரசாரங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக தன்னுடைய சொத்தில் பாதியை செலவிட்டார். மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு இந்தியாவிலேயே முதல்முதலாக தடை விதிக்கப்பட்டது கோபிச்செட்டிபாளையம் நகராட்சியில்தான். 60 வருடங்களுக்கு முன்பாகவே இதைச் செயல்படுத்தியவர் கோபிச்செட்டிபாளையம் நகராட்சியின் சேர்மனாக இருந்த லட்சுமண அய்யர்தான்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``உயர்ந்த சிந்தனையுடன், எளிமையான வாழ்க்கை வாழுங்கள். ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போதும், இரவு தூங்கும்போதும் நாம் கடவுளை வணங்க வேண்டும். நாம் தவறு செய்வதைப் பார்க்க இங்கு யாரும் இல்லை என்கின்ற காரணத்தால்தான் பலரும் தவறு செய்கின்றனர். நம்மைக் கடவுள் கண்காணிக்கிறார் என்று தெரிந்தால்தான் மனிதன் தவறு செய்வதை நிறுத்துவான். நாடு இன்றைக்கு வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நிச்சயமாக ஊழலை ஒழிக்க வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!