``மாடித்தோட்டத்துக்கு இயற்கை உரம் வேண்டுமா? எங்களை அணுகுங்கள்!” - பேரூராட்சி இணை இயக்குநர் அழைப்பு | pasumai vikatan meeting

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (29/08/2018)

கடைசி தொடர்பு:19:12 (29/08/2018)

``மாடித்தோட்டத்துக்கு இயற்கை உரம் வேண்டுமா? எங்களை அணுகுங்கள்!” - பேரூராட்சி இணை இயக்குநர் அழைப்பு

செடிகளுக்குத் தேவையான உரத்தை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றி கிடைக்கக்கூடிய பொருள்களிலிருந்து மாடித்தோட்டத்தை அமைக்க முடியும்.

``மாடித்தோட்டத்துக்கு இயற்கை உரம் வேண்டுமா? எங்களை அணுகுங்கள்!” - பேரூராட்சி இணை இயக்குநர் அழைப்பு

ன்று உலகம் எதிர்கொண்டுவரும் பெரும் பிரச்னைகளில் ஒன்று கழிவு மேலாண்மை. ஆண்டுக்கு 2.12 பில்லியன் டன் கழிவு உருவாக்கப்படுகிறது. இந்தக் கழிவுகளை மறுசுழற்சி செய்து இன்னொரு பொருளாக மாற்றி நம்முடைய தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். இந்த முயற்சியை அரசுகளே ஊக்குவித்து வருகின்றன. தமிழ்நாட்டில் பேரூராட்சிகள் இந்தக் கழிவு மேலாண்மை பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது. அதுவும் திடக் கழிவுகளைத் திறம்படக் கையாண்டு, அதை விவசாயத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இயற்கை உரமாக மாற்றி வருகின்றன பேரூராட்சிகள். 

இயற்கை

இந்த விஷயங்கள் விவசாயிகளுக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் `இனியெல்லாம் இயற்கையே’ என்ற கருத்தரங்கு காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. பேரூராட்சிகள் இயக்ககம், பசுமை விகடன், கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் ஆகியவை இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தியது. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொண்டு அமைப்புகள், பேரூராட்சி ஊழியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். கலைமாமணி கலை அறப்பேரவை கலைவாணன் குழுவின், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புஉணர்வு குறித்த பொம்மலாட்டம் நிகழ்ச்சியுடன் கருத்தரங்கு தொடங்கியது. 

நிகழ்வில் தொடக்க உரை ஆற்றிய பேரூராட்சிகள் இணை இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி, ``நம்மை வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள் விவசாயிகள். இந்த விவசாயிகளை ஒன்றிணைத்து இந்நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில், 1980களில் குப்பை என்பது நமக்குப் பொருட்டே இல்லை. ஆனால், பிறகு வந்த காலகட்டங்களில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க அதிகரிக்கக் குப்பைகளும் பெருகத் தொடங்கின. குறிப்பாக நகர்ப் பகுதிகளில் குப்பைகள் பெருகி, அதைக் குறைப்பதென்பது மிகப்பெரிய சவாலாகிவிட்டது. மத்திய, மாநில அரசுகள் குப்பையின் அளவைக் குறைக்கப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பேரூராட்சியிலும் இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை நேரடியாகவே அந்தந்த பேரூராட்சிகளில் சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம். விரைவில் உரங்களின் இருப்பு நிலையை, எங்களது வெப்சைட்டிலும் வெளியிட உள்ளோம். விவசாயிகள், மாடித்தோட்டம் போட்டிருப்பவர்கள் அருகிலுள்ள பேரூராட்சிகளைத் தொடர்புகொண்டு இயற்கை உரங்களை வாங்கிப் பயன்படுத்தி மகசூலைப் பெருக்கலாம்” என்றார். 

மண்புழு உரம் தயாரிப்பது பற்றிப் பேசிய மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், ``இந்தியாவில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்புழுக்கள் இருக்கின்றன. அவற்றை மேல்மட்ட புழுக்கள், நடுமட்ட புழுக்கள், அடிமட்ட புழுக்கள் என மூன்று விதமாகப் பிரிக்கலாம். மேல்மட்ட புழுக்கள் உரம் தயாரிக்கும். நடுமட்ட புழுக்கள் சுரங்கங்கள் தயாரித்து மேலிருப்பதை அடியில் கொண்டு சேர்க்கும். அடிமட்ட புழுக்கள் மண்ணைச் சீர்செய்யும். சாக்கடை கழிவுகள், மாட்டுச்சாணம் இருந்தாலே அங்கே அதிக அளவில் மண்புழுக்கள் வந்துவிடும். மட்கிய இலைதழைகளின் மீது வறட்டியை வைத்தால் போதும், மண்ணுக்கு அடியிலிருந்து மண்புழுக்கள் வந்து அவற்றை மட்க வைத்துவிடும். இந்த மண்புழுக்கள் உயிருள்ள கழிவுகளை மட்க வைத்து, நமக்கு அற்புதமான உரத்தைக் கொடுக்கின்றன. இந்த உரத்தை மாடித்தோட்டத்திலோ, விவசாய நிலத்திலோ தாராளமாகப் பயன்படுத்தலாம். இது ஒன்றைக் கொடுத்தாலே போதும் மகசூல் தானாகப் பெருகுவதை உணர்வீர்கள்” என்றார். 

இயற்கை

மாடித்தோட்டம் அமைப்பது குறித்துப் பேசிய திண்டுக்கல் பரமேஸ்வரன், ``தற்போது உள்ள சூழலில் மாடித்தோட்டம் என்பது செலவுமிக்கது. மண்புழு உரம் போட வேண்டும், ஒரு குறிப்பிட்ட சிலரால் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்ற கருத்து நிலவுகிறது. ஆர்வம் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் மாடித்தோட்டம் வைக்கலாம். செடிகளுக்குத் தேவையான உரத்தை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றி கிடைக்கக்கூடிய பொருள்களிலிருந்து மாடித்தோட்டத்தை அமைக்க முடியும். தொட்டிகளில் நாம் பயன்படுத்தும் மண் இறுக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நுண்ணுயிர் பெருகும். இதனால், மண்ணுக்குத் தேவையான சத்துகள் தானாக உற்பத்தியாகிவிடும். காய்கறி கழிவுகள், முட்டை ஓடு, பழங்களின் கழிவு, கரும்புச்சக்கை, தேங்காய் நார் போன்றவை நகர்ப்புறங்களில் எளிமையாகக் கிடைக்கும். அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் இயற்கைப் பொருள்களைக் கொண்டு உரங்களைத் தயாரிக்கலாம்” என்றார். 

உத்தரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் பேசும்போது, ``தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளைப் பேரூராட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்காகவே பசுமை விகடனுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே கழிவு மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கழிவு மேலாண்மையை மற்றவர்களும் கையாள வேண்டும் என்ற நோக்கிலும், அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று நோக்கிலும் இது நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த எங்கள் துறையின் இயக்குநர் பழனிச்சாமி, பசுமை விகடன், கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி நிர்வாகம், ஹேண்ட் இன் ஹேண்ட் ஆகியோரின் உழைப்பால் இந்தக் கருத்தரங்கு இத்தனை பேர் கூடியிருக்கும் அரங்கமாக மாறியிருக்கிறது. ஓர் அரசு நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடி, இந்நிகழ்வை வெற்றியடைய வைத்திருக்கிறது” என்றார் உற்சாகத்தோடு. 

அடுத்து,வேளாண் பொருள்களிலிருந்து பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள்கள் தயாரிப்பது குறித்துப் பேசினார் ஹாண்ட்இன் ஹாண்ட் இன்குளூசிவ் டெவலப்மென்ட் பொது மேலாளர் பரிசுத்தம். ``ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து பயன்படுத்த தமிழக அரசு தடைசெய்துள்ளது. சில மாவட்டங்களில் முன்கூட்டியே அமல்படுத்திவிட்டார்கள். பிளாஸ்டிக் மொத்தமுமே பிரச்னை அல்ல. ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி வீசக்கூடிய பிளாஸ்டிக்தான் முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. கிராமங்களில் உள்ளவர்கள் வீட்டுக்குப்பைகளைச் சேகரித்து வயலுக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள். இப்போது அந்தக் குப்பையில் பிளாஸ்டிக்கும் கலந்து இருக்கிறது. பிளாஸ்டிக்கை அப்புறப்படுத்தாமல் அப்படியே அந்த இயற்கை உரத்தை வயலில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். வயலில் வைத்துக் கொளுத்தி விடுகிறார்கள். இதனால் நிலத்தில் நச்சுத்தன்மையை ஏற்படுகிறது’’ என்றவர், செயல் விளக்கங்களோடு பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களை எப்படித் தயாரிப்பது. அவற்றை எப்படிச் சந்தைப்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தார். 

நிகழ்ச்சியில் முன்னோடி இயற்கை விவசாயி மதுராந்தகம் சுப்பு, அரியனூர் ஜெயச்சந்திரன், உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த `எழில்சோலை’ மாசிலாமணி, திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி தெய்வசிகாமணி உள்ளிட்டோர் இயற்கை விவசாயம் குறித்து, தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பேரூராட்சிகள் இயக்ககம் மூலம் துணிப்பையில் ஒரு கிலோ மண்புழு உரம், வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

இயற்கை

திருக்கழுக்குன்றத்திலிருந்து வந்திருந்த பெண்கள் இயற்கை விவசாயக் கூட்டுக்குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி. ``அரசு சார்பில் நடத்தப்பட்ட, இந்த இயற்கைப் பயிலரங்கு இவ்வளவு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு நிமிடமும், பயனுள்ளதாக இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியமானது மட்டுமல்ல, அத்தியாவசியமானதும் கூட...’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

வாகனங்களின் டயர்களைக் கொண்டு காளை, கொரில்லா உள்ளிட்ட பத்து வகையான பொம்மைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனுடன் சேர்ந்து மக்கள் ஆர்வமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு அரங்கத்துக்கு வெளியே நவதானிய சுண்டல் மற்றும் 108 மூலிகைகள் கலந்த முடவாட்டு கிழங்கு சூப் கொடுக்கப்பட்டது. மண் கோப்பையில் பரிமாறப்பட்ட இந்தச் சூப் வந்திருந்தவர்கள் அனைவரையும் கவர்ந்தது. மதியம் சுவையான உணவும் பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்கள் தயாரித்தல், மாடித்தோட்டம் அமைத்தல், கழிவுப் பொருள்களிலிருந்து கலை பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்டவற்றை விளக்கும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பயனுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன நிறைவோடு, விவசாயிகள் தங்களது வீட்டுக்குத் திரும்பினர். 


டிரெண்டிங் @ விகடன்