கரூர் டு கோவைக்கு 2.30 மணி நேரத்தில் செல்லலாம்! - வந்துவிட்டது அரசு ஏசி பேருந்து | Minister MR Vijyabhaskar flags off new bus service between Karur - Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (29/08/2018)

கடைசி தொடர்பு:20:30 (29/08/2018)

கரூர் டு கோவைக்கு 2.30 மணி நேரத்தில் செல்லலாம்! - வந்துவிட்டது அரசு ஏசி பேருந்து

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் குளிர்சாதன வசதிகொண்ட சொகுசுப் பேருந்து 2.30 மணி நேரத்துக்குள் கோயம்புத்தூரை சென்றடையும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அரசு ஏசி பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம் ஆர் விஜயபாஸ்கர்

கரூரிலிருந்து கோயம்புத்தூருக்குக் குறைந்த நேரத்தில் செல்லும் வகையிலும், முக்கிய இடங்களில் நின்று செல்லும் வகையிலுமான சொகுசுப் பேருந்து சேவையைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் முன்னிலையில் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயகுமார், "முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்படி போக்குவரத்துத்துறையில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகக் கரூரிலிருந்து கோயம்புத்தூருக்கு இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன்கூடிய குளிர்சாதன வசதிகொண்ட சொகுசுப் பேருந்து இன்று இயக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புப் பேருந்தில் 30 இருக்கை வசதி மற்றும் 15 படுக்கை வசதிகள் உள்ளன.

இந்தப் பேருந்து சூலூர், ராயல்கேர் மருத்துவமனை, கே.எம்.சி.எச் மருத்துவமனை, ஜி.ஆர்.டி மருத்துவக்கல்லூரி, சி.ஐ.டி கல்லூரி, ஹோப்ஸ் கல்லூரி, சிங்கா நல்லூர் பேருந்து நிலையம், கிருஷ்ணம்மாள் கலைக்கல்லூரி, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக்கல்லூரி, குப்புசாமி நாயுடு மருத்துவமனை,கே.ஜி மருத்துவமனை, காந்திபுரம் பேருந்து நிலையம், அவினாசிலிங்கம் கல்லூரி, கங்கா மருத்துவமனை என மொத்தம் 7 கல்லூரிகள் மற்றும் 5 மருத்துவமனைகளில் நின்று செல்லும் வகையில் இயக்கப்படவுள்ளது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் இப்பேருந்தானது 2.30 மணி நேரத்துக்குள் கோயம்புத்தூரை சென்றடையும். மீண்டும் மாலை 5.30 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து கரூர் வந்தடையும். முதன்முறையாகக் கரூர் மாவட்டத்தில் இந்த அரசால்தான் இதுபோன்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறைந்த தொலைவில், குறைந்த பயண நேரத்தில் சொகுசுப் பேருந்து என்ற வகையில் இப்பேருந்து இயக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரிலிருந்து கரூருக்கு வரும்போது தென்னிலை, பரமத்தி, விசுவநாதபுரி, வடிவேல் நகர், மில்க்கேட், பைபாஸ் ரவுண்டானா, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பயணிகள் இறங்கும் வகையில் இப்பேருந்து நின்று செல்லும். இந்தச் சிறப்புப் பேருந்து இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கும் மருத்துவமனை செல்லக்கூடிய நோயாளிகளுக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பெரிதும் பயனுள்ள வகையில் இப்பேருந்து இருக்கும்" என்று கூறினார்.