வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (29/08/2018)

கடைசி தொடர்பு:21:00 (29/08/2018)

முதல்வர் உத்தரவை கலெக்டர்கள் மீறலாமா? - ஆதங்கப்படும் விக்கிரமராஜா

``பிளாஸ்டிக் பொருள்களுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல்தான் தடை விதிக்க இருப்பதாக தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போதே பெரும்பாலான மாவட்டங்களில் கலெக்டர்கள் கடைகளில் புகுந்து பிளாஸ்டிக் பொருள்களை அள்ளிச் செல்கிறார்கள். முதல்வர் உத்தரவை கலெக்டர்கள் மீறலாமா?" என்று வெடிக்கிறார் வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா.
 

விக்கிரமராஜா

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  `` `சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்' என்று மத்திய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அறிவித்தது. அரியணை ஏறிய பின்பும் அறிவித்தது. ஆனால், தற்போது வால்மார்ட் போன்ற நிறுவனங்களை சில்லறை விற்பனையில் அனுமதித்து வருவது கண்டிக்கத்தக்கது. இதைக் கண்டித்து செப்டம்பர் 28-ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அது தொடர்பாக செப்டம்பர் 4-ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

'வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும்' என்றுதான் தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் கலெக்டர்கள் தற்போது கடைகளில் புகுந்து பிளாஸ்டிக் பொருள்களை அள்ளிச் செல்வதால், வர்த்தகர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது முதல்வர் உத்தரவை மீறும் செயலாகும். பிளாஸ்டிக் தடைக்கு இன்னும் காலம் இருக்கிறது. அதற்குள் மாவட்ட கலெக்டர்கள் தன்னிச்சையாக இப்படி செயல்படுவது வணிகர்களைக் கடுமையாக பாதிக்கவே செய்யும். அதனால், இதை ஆட்சியாளர்கள் தவிர்க்க வேண்டும்" என்றார்.