வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (29/08/2018)

கடைசி தொடர்பு:10:22 (30/08/2018)

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 100-வது நாள்! - போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்து 100-வது நாளான இன்று, மாநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்ததால், அங்கு மயான அமைதியே நிலவியது. 

துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 99 நாள்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களின் 100-வது நாளான கடந்த மே 22-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக முற்றுகைப் போரட்டத்தில் ஈடுபடச் சென்றனர் போராட்டக்காரர்கள். இதில், ஏற்பட்ட கலவரத்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, மே 28-ம் தேதி ஆலை மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டதுடன், ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. 

துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச் சூடு நடந்து இன்றுடன் 100 நாள்கள் நிறைவடைந்தன. கடந்த மே 22-ம் தேதி முதல் இன்றுவரை தூத்துக்குடியில் சில முக்கியப் பகுதியில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர். 100-வது நாளான இன்று, போராட்டம், ஆர்ப்பாட்டம் என எதுவும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக, மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்காக, கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்ற கிராமப் பகுதிகளைச் சுற்றிலும் கிறிஸ்தவ சர்ச்சுகள், மீனவர்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில்  போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தயார் நிலையில் வஜ்ரா வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. 

இந்தப் பகுதிகளில், போலீஸாருடன் தாசில்தார்களும் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளைப் பராமரிக்கும்படி, அசம்பாவித சம்பவங்கள் நடக்காதபடி கண்காணித்திட, நிர்வாகத்துறை நடுவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும்  விதமாக, எந்தவொரு அஞ்சலிக் கூட்டத்துக்கும் போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, தூத்துக்குடி சின்னக்கோயில் சர்ச்சில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் ஆன்மா சாந்தி அடைய திருப்பலிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, திருப்பலி நடைபெற்றது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க