வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (30/08/2018)

கடைசி தொடர்பு:09:07 (30/08/2018)

குழந்தைகள் எடை பார்க்கும் கருவி டெண்டர் வழக்கு - மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

அரசு மகப்பேறு மருத்துவமனைகளுக்கு, குழந்தைகள் எடை பார்க்கும் கருவிகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகள், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்

 

அரசு மகப்பேறு மருத்துவமனைகளுக்கு, குழந்தைகள் எடை பார்க்கும் கருவிகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை சமூக நலத்துறை கோரியது.  ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் இந்த ஒப்பந்தப் புள்ளிகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமான ஆவணங்களை மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்கும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவில்லை எனக் கூறி, அகமதாபாத்தைச் சேர்ந்த நிறுவனத்தின் டெண்டரை நிராகரித்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய முடியாததால், நேரில் சமர்ப்பிப்பதாகக் கூறியதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு, தங்களுக்கு வாய்ப்பு ஏதும் தராமல் 30 ஆண்டுகள் அனுபவம்பெற்ற தங்கள் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை நிராகரித்துவிட்டதாகவும்,  நடப்பாண்டு அனுமதிபெற்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'டெண்டர் நடவடிக்கைகளைப் பொறுத்தவரை தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும்' என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.