``ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்" - நல்லகண்ணு பேட்டி!

'ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
நல்லக்கண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திருச்சியில் கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  "தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றிருப்பதற்கு வாழ்த்துகள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். அதிலும், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடத்தும் மத்திய அரசை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவும், தமிழ்நாட்டில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரவும் ஸ்டாலின் தி.மு.க-வின் தலைவராகியிருப்பது பாராட்டுக்குரியது. தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. மதவாத கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் தி.மு.க உறுதியுடன் இருக்கிறார்கள்.
 
மதவாத சக்தியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அணி சேர்ந்திருக்கிறோம். அது வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மத்திய அரசு, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்ற வேண்டும் என முடிவெடுத்துள்ளார்கள். பா.ஜ.க-வின் கொள்கைகள் நாட்டை பின் நோக்கிக் கொண்டுபோகக்கூடியது. இதை அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற, இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்து மத்திய அரசை வீழ்த்த வேண்டும். உலகத்தின் பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பிறகு, பல ஆண்டுகள் போராடி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு தண்ணீர் வந்தும் அதை நம்மால் சேமிக்க முடியவில்லை, கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை.அதிக அளவு மணல் கொள்ளை, நீர் நிலைகளை முறையாகத் தூர் வாரவில்லை.  அதனால்தான் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. இதற்கு முழுக் காரணம் அ.தி.மு.க அரசுதான். தமிழகத்தில் நீர்நிலைகள் தூர் வாருவது தொடர்பாக பொதுப்பணித் துறை  வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!