``மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம் தலையாட்டுவது கிடையாது'' - தமிழக முதல்வர் பேச்சு!

'மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு தலையாட்டுவதில்லை' என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  நாகை மாவட்டம் திருக்கடையூரில்  நடைபெறும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் மகன் திருமணத்துக்குச் செல்வதற்காக, மாலையில்  கடலூர் மாவட்டம் வழியாகச்  சென்றார். அப்போது,  கடலூரில் தமிழக தொழில் முறை அமைச்சர் சம்பத், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆகியோர் வரவேற்று,  அவருக்கு பூங்கொத்து அளித்தனர். இதைத் தொடர்ந்து சிதம்பரத்தில், கடலூர் எம்.பி., அருண்மொழித்தேவன், சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன், காட்டுமன்னார்கோவில்  எம்.எல்.ஏ., முருகுமாறன் ஆகியோர் வரவேற்பு  அளித்தனர். பின்னர், சிதம்பரம் பொதுப்பணித்துறை  விருந்தினர் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "கேரளாவில் அதிக மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதுபோன்ற நிலை ஏற்படாது. அதிக மழை பெய்யும்போது வெள்ளம் ஏற்படுவது இயற்கை. தமிழகத்தில் அதை சமாளிக்க அனைத்து விதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டள்ளது. தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் ஏரிகள் உள்ளன. பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை சேமிக்க பெரும்பாலான ஏரி, குளங்களை  குடிமராமத்து பணிகள்மூலம்  தூர்  வாரப்பட்டுள்ளது. இந்த குடிமராமத்துப் பணிகள்  முழுக்க முழுக்க விவசாயிகள்மூலம் நடந்துவருகிறது.

தமிழக அரசு

இதுவரை டெண்டர் விடப்பட்டதுதான் இப்பணிகள் நடைபெறும். ஆனால், தற்போது அப்படி  இல்லை. விவசாயிகள்மூலம் பணிகள் சிறப்பாக நடந்துவருகிறது. இதைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டும்  பரிட்சாத்த முறையில் 328 கோடி மதிப்பீட்டில் சுமார் 1500 ஏரிகள் தூர் வார தேர்வுசெய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம், தமிழகத்தில் பெய்யும் மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இதைப் பொறுக்க முடியாமல், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பெய்கின்ற மழை நீரை கடலில் சென்று வீணாகாமல் சேமிப்பதற்கு ஆறுகளில் தடுப்பணை கட்ட  3 ஆண்டுகால திட்டமாக ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கி, அதில் முதற்கட்டமாக 62 தடுப்பணைகள் கட்ட  292 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்க உள்ளது. முன்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசு எப்படி செயல்பட்டதோ, நாங்களும் அப்படித்தான் செயல்பட்டுவருகிறோம். மத்திய அரசின் திட்டங்கள் எல்லாவற்றுக்கும் நாங்கள் தலையாட்டுவது கிடையாது. எதிர்க்கவேண்டியதை எதிர்த்தும், ஆதரிக்கவேண்டியதை ஆதரித்தும் வருகிறோம்.  

எதிர்கட்சிகள் வேண்டும் என்றே எங்கள்மீது குற்றம் சாட்டுகின்றன. மத்திய அரசில் தி.மு.க 14 ஆண்டு பொறுப்பில் இருந்தார்கள். என்ன திட்டத்தைகொண்டுவந்தார்கள்? காவிரி நதி நீர் பிரச்னையைக்கூட தீர்க்க முடியவில்லை. கடந்த 2007ல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தது. மத்திய, மாநில ஆட்சியில் அவர்கள்தான் இருந்தார்கள். அப்போது, தி.மு.க தலைவர், மகன், பேரன் எல்லாம் மத்திய மந்திரியாக இருந்தாங்க நினைத்திருந்தால் செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஆனால் அம்மா அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புமூலம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துள்ளது. தி.மு.க எதையும் செய்யவில்லை.

அவர்கள் நினைத்திருந்தால், 2007லேயே காவிரி நடுவர் மன்றத்தை அமைத்திருக்கலாம். அவர்களுக்கு மத்தியில் பதவி அதிகாரம் மட்டும்தான் வேண்டும் என நினைத்தார்கள். மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்பின்படி நமக்கு கிடைக்கவேண்டிய நீர் வழங்கப்படும். நாமும் பெறுவோம். கடைமடைப்பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணம், அனைத்து ஏரி, குளங்களையும் நீர் நிரப்பியதால் செல்லவில்லை. தற்போது 95 சதவிகிதம் அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் கொடுத்தாகிவிட்டது. மேலும், படிப்படியாக  மற்ற பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கப்படும்' என்று அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!