உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை விமர்சித்த விவகாரம் - மன்னிப்புக் கோரினார் தங்க தமிழ்ச்செல்வன்!

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில், நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி, தங்க தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல்செய்துள்ளார்.

தங்க தமிழ்செல்வன்


18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், இரு நீதிபதிகளும் வெவ்வேறு  தீர்ப்புகளை வழங்கினர். எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்தது சரிதான் என தலைமை நீதிபதி  வழங்கிய தீர்ப்பை விமர்சிக்கும் வகையிலும், இந்தத் தீர்ப்பு விலைக்கு வாங்கப்பட்டதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்செல்வன் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் பேட்டியளித்திருந்தார். இது தொடர்பாக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் ஸ்ரீமதி, கண்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்காக ஒப்புதல் கோரி, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுக்கு அனுப்பப்பட்டது. இந்த மனுவில் விளக்கமளிப்பதற்காகக் கடந்த மாதம் தங்க தமிழ்ச்செல்வன் அரசு தலைமை வழக்கறிஞர் முன்னிலையில் ஆஜராகி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியதுடன், நிலைப்பாடு குறித்து விரிவான பதில் மனு தாக்கல்செய்ய அவகாசம் கோரினார்.

இந்த வழக்கு, மீண்டும் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, தங்க தமிழ்செல்வம் ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் கே.ஆர்.தமிழ்மணி ஆஜராகி, தமிழ்ச்செல்வனின் பதில் மனுவைத் தாக்கல்செய்தார். அதில், தனது செயல்பாட்டுக்கு  நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும்,  தான் சார்ந்துள்ள அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோதுகூட, அவர் நீதிமன்றத்தை விமர்சிக்காமல் கண்ணியமாக நடந்துகொண்ட நிலையில், அவர் வழிவந்த தான், இதுபோன்று நீதிமன்றத்தை விமர்சிப்பது தவறு என்பதை உணர்வதாகவும், அதற்காக ஆகஸ்ட் 23-ம் தேதி வருத்தம் தெரிவித்ததுகுறித்து செய்திகள் வெளிவந்ததாகப் பதில் மனுவில் தெரிவித்துள்ளார். அதனால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் கோரிக்கை வைத்திருந்தார். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டுமா வேண்டாமா என்பதுகுறித்து அவர் கொடுத்துள்ள ஆதாரங்களைப் பார்த்துவிட்டு விளக்கமளிப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவித்ததால், விசாரணை  செப்டம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!