ஆர்கானிக் உணவு தெரியும்... ஆர்கானிக் பட்டுப்புடவை தெரியுமா?

ஆர்கானிக் உணவு போல ஆர்கானிக் உடைகள் வேண்டும் என்கிற எண்ணம் சமூக ஆர்வலர்களிடம் பரவி வருகிறது. அதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை முயற்சி மேற்கொண்டுவருகிறது.

ஆர்கானிக் உணவு தெரியும்... ஆர்கானிக் பட்டுப்புடவை தெரியுமா?

ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தி பயிர் செய்யப்படும் உணவுப்பொருள்களில் விஷத்தன்மை உள்ளது. அப்படி விளையும் உணவைச் சாப்பிடும் மனிதர்களுக்குப் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது என்கிற எண்ணம் இன்று மக்களிடையே ஏற்பட்டுவருகிறது. அதற்கு மாற்றாக இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றோர் பல ஆண்டுகளாக விவசாயிகளிடம் செய்து வந்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர். அதன் விளைவு, இன்று ஆயிரக்கணக்கான ஏக்கரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருள்கள் எளிமையாக நுகர்வோருக்குச் சென்று சேரவேண்டும் என்கிற நோக்கில் பெருநகரங்கள் வணிக வளாகங்கள் தொடங்கி சிறுநகரங்களின் கடை வீதிகள் வரை ``ஆர்கானிக் ஷாப்’’ எனப்படும் இயற்கை அங்காடிகள் திறக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

ஆர்கானிக் புடவை


நஞ்சில்லா உணவு மட்டும் போதுமா. நஞ்சில்லா உடைகள் வேண்டாமா. நூற்றுக்கணக்கில் பட்டுப்புழுக்களை அழித்து அது குடியிருக்கும் கூட்டை வேகவைத்து பஞ்சாக்கி, அதை நூற்று நூலாக்கி, அந்த நூலுக்கு ரசாயனம் கலந்த சாயமேற்றி, வண்ண வண்ணப்புடவைகள் நெய்யப்படுகின்றன. அதுவும் ஒருவகை நஞ்சுப்புடவைதானே என்கிற கேள்வி சமூக ஆர்வலர்கள் பலரால் கேட்கப்படுகிறது. நியாயமான கேள்வி.

ஆர்கானிக் உணவு போல ஆர்கானிக் உடைகள் வேண்டும் என்கிற எண்ணம் சமூக ஆர்வலர்களிடம் பரவி வருகிறது. அதை ஊக்குவிக்கும்  விதமாக, தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை முயற்சி மேற்கொண்டுவருகிறது. பெண்கள் விரும்பி அணியும் பட்டுப்புடவைகள் நெசவு செய்ய தேவையான பட்டு நூல் பட்டுக்கூடுகளில்( கக்கூன்) இருந்து பெறப்படுகிறது. மல்பெரி இலைகளை உணவாகக் கொடுத்துத்தான் அந்தப் பட்டுப்புழுக்கள் வளர்ந்து தன்னைச் சுற்றி கூடுகட்டி அந்தக் கூட்டுக்குள் சமாதி அடைந்து விடுகிறது. மல்பெரி சாகுபடி தொடங்கி பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் பட்டு நூல் சாயமேற்றுதல் வரை இங்கு எல்லாப் பயன்பாட்டிலும் ரசாயனம் கலந்திருக்கிறது. இதை மாற்றி துளியும் ரசாயனம் கலக்காத பட்டுப்புடவைகள் தயாரிக்க வேண்டும். அதற்கு ``அகிம்சா பட்டு’’ என்று பெயரிட்டு ஆர்கானிக் பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை.

குறிப்பாக, அஸ்ஸாம் மாநில மலைவாழ்மக்கள் உற்பத்தி செய்யும் அகிம்சா பட்டு மூலம் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகள் உலக அளவில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்ஸ்லிப் வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களையும் அகிம்சா பட்டு உற்பத்தியில் களம் இறக்கியுள்ளது தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை.

பட்டுப்புடவைஇது குறித்து உடுமலைப்பேட்டை மண்டல பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ம.கோவிந்தராஜு கூறியதாவது.

தமிழ்நாடு அளவில் பட்டுக்கூடு உற்பத்தியில் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் முதலிடத்தில் உள்ளார்கள். மல்பெரி செடிகளை தங்கள் தோட்டத்தில் வளர்த்து அந்த இலைகளைப் பறித்து பட்டுப்புழுக்களுக்கு உணவாகக் கொடுத்து 20 நாள்கள் வளர்த்து, ஒருவகை திரவத்தைச் சுரந்து அந்தப் புழுக்கள் கட்டும் பட்டுக்கூடுகளைச் சேகரித்து கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகிறார்கள். ஏக்கர் மல்பெரியிலிருந்து மாதம் 200 கிலோ பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யமுடியும், அதன் மூலம் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் 90 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டிவரும் முன்னோடி விவசாயிகள் பலர் அந்தப் பகுதியில் உள்ளார்கள். ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்து வந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் தாங்கள் பார்த்த வேலையை உதறித்தள்ளிவிட்டு, சொந்த கிராமத்துக்கு வந்து பட்டுப்புழு வளர்ப்பை மேற்கொண்டுவருகிறார்கள்.

பட்டுப்புடவைகளை ஆர்வமுடன் வாங்கும் பெண்கள், சுப நிகழ்வுகளில் அணிந்த பிறகு, அதை அப்படியே மடித்து பீரோவில் வைத்து விடுகிறார்கள். துவைத்தால் பட்டுப்புடவையின் பளபளப்பு போய்விடும் என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம். ஆனால், அஸ்ஸாம் மாநில மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்யும் அகிம்சா பட்டுக்கூடுகளிலிருந்து நெசவு செய்யப்படும் பட்டுப்புடவைகள், துவைக்கத் துவைக்கப் பளபளப்பு கூடும், வண்ணம் மின்னும் என்பது தனிச்சிறப்பு. அதே போல் தமிழ்நாட்டிலும் அகிம்சா பட்டு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை ஒரு திட்டம் வகுத்தது.

அதன் அடிப்படையில் பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்ஸ்லிப் வனப்பகுதியில் இருக்கும், கோழிகமுத்தி, கூமாத்தி ஆகிய மலைக்கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி பெண்களுக்கு அகிம்சா பட்டு உற்பத்திக்கான களப்பயிற்சியைப் பட்டுவளர்ச்சித்துறை வழங்கி வருகிறது. வழக்கமாகப் பட்டுப்புழுக்களுக்கு உணவாக மல்பெரி இலைகள் வழங்கப்படும். ஆனால், அகிம்சா பட்டுப் புழுக்களுக்கு  ஆமணக்கு இலைகள்தாம் உணவு.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பெறப்பட்ட, ஆமணக்கு விதைகளை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். பெறப்பட்ட ஆமணக்கு விதைகளைத் தங்கள் குடியிருப்புப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் விதைத்துள்ளார்கள்.
மண் வளம், மழை வளம் இரண்டும் மிகுந்த மலைப்பகுதியில் ஆமணக்குச் செடிகள் சிறப்பாக வளர்கின்றன. அந்தச் செடியின் இலைகளைப் பறித்து, பட்டு வளர்ச்சித் துறை வழங்கியுள்ள பட்டுப்புழுக்களுக்கு உணவாகக் கொடுத்து, குடிசைத்தொழிலாக தங்கள் வீடுகளில் வளர்த்து வருகிறார்கள் ஆதிவாசி மக்கள்.

அவர்கள் உற்பத்தி செய்யும் அகிம்சா பட்டுக்கூடுகளைப் பயன்படுத்தி அகிம்சா பட்டுப்புடவை உற்பத்தியை நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஆர்கானிக் பட்டு என்கிற பெயரில் சில நெசவாளர் சங்கம் அகிம்சா புடவைகளை விற்பனை செய்து வருகின்றன. இயற்கை ஆர்வலர் மத்தியில் அகிம்சா பட்டுக்கு வரவேற்பு பெருகிவருகிறது.

அகிம்சா பட்டு உற்பத்தி மூலம் மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வாரை வருமானம் ஈட்டி வருகிறார்கள். ஆதிவாசி மக்கள்.
இதனால் அவர்களது பொருளாதாரம் உயர்ந்துள்ளது” என்றார்.

வனமக்களின் செழிப்புதான் வனத்தின் செழிப்பு.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!