அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்! - தி.மு.க-வில் சேர்கிறார் முல்லைவேந்தன் | Former Ministermullai vendhan called DMK president Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (30/08/2018)

கடைசி தொடர்பு:12:17 (30/08/2018)

அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்! - தி.மு.க-வில் சேர்கிறார் முல்லைவேந்தன்

முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு? என்ற தலைப்பில், கடந்த 27-ம் தேதி நமது விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி இன்று, தி.மு.க தலைவர் ஸ்டாலின், முல்லைவேந்தனை தி.மு.க-வில் சேர்க்க தருமபுரி தி.மு.க மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணியை நேரில் அனுப்பி அழைப்பு விடுக்க உத்தரவிட்டுள்ளார். 

முல்லை வேந்தன் - ஸ்டாலின்

தி.மு.க-வின் தருமபுரி மாவட்ட கழகச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர் முல்லைவேந்தன். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, கட்சியின் வெற்றிக்குத் துணை நிற்காமல் துரோகம் செய்துவிட்டதாகவும், தி.மு.க வெற்றிக்கு சரியாகப் பணி செய்யவில்லை என்ற காரணங்களாலும் தி.மு.க பொதுச்செயலாளர் கே.அன்பழகன் இவரை கட்சியிலிருந்து நீக்கினார். மன்னிப்புக் கடிதம் அளித்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என தி.மு.க தலைமை முன்னதாகக் கூறியிருந்தது. ஆனால், முல்லைவேந்தன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். 

பின்னர், 2015-ம் ஆண்டு தே.மு.தி.க-வில் இணைந்து, சில பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டாலும், அதன் பிறகு தே.மு.தி.க-விலும் பெரிய நாட்டம் காட்டாமல் சற்று விலகியே இருந்தார். காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தபோது, முல்லைவேந்தன்  இரண்டு முறை வந்து பார்த்துள்ளார். மேலும், கருணாநிதி மறைவுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லத்துக்கும் ராஜாஜி ஹாலுக்கும் முல்லைவேந்தன் சென்று அஞ்சலிசெலுத்தினார். 

இந்த நிலையில், கருணாநிதி இறந்த பிறகு தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின், கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, முல்லைவேந்தனையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், முல்லைவேந்தனை மீண்டும் கட்சியில் சேர்க்க முடிவுசெய்துள்ளார். அதன்படி, இன்று தருமபுரி மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.