பறிபோன 40 பேரின் உயிர்கள்... ஹெல்மெட் அணியாததால் நெல்லையில் நடந்த சோகம் | nellai police has filed case over 15,000 people for not wearing helmet

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (30/08/2018)

கடைசி தொடர்பு:14:40 (30/08/2018)

பறிபோன 40 பேரின் உயிர்கள்... ஹெல்மெட் அணியாததால் நெல்லையில் நடந்த சோகம்

நெல்லை மாநகரில் சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும் ஹெல்மெட் அணியாமலும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிய 15,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

ஹெல்மெட் விழிப்புணர்வு

நெல்லை மாநகரக் காவல்துறை சார்பாக ஹெல்மெட் விழிப்புஉணர்வு பிரசாரம் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். பின் சீட்டில் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். தலைக்கவசம் இல்லாத பயணம் விபத்தின்போது உயிரிழைப்பை ஏற்படுத்தும். செல்போன் பேசிக் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டக் கூடாது. 

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டக் கூடாது. 18 வயதுக்குக் குறைவான நபர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் உரிமையாளர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் இந்த விழிப்புஉணர்வு வாகனப் பேரணி நடைபெற்றது. 

சாலை விதிகளைப் பின்பற்றுதல் ஹெல்மெட் விழிப்புஉணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி பொதுமக்கள், போக்குவரத்து துறை, காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இருசக்கர வாகனப் பேரணியை நெல்லை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் ஃபெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நெல்லை மாநகரில் இந்த ஆண்டு இதுவரையிலும் சாலை விபத்துகளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது தலைக்கவசம் அணியாமல் இருந்ததன் காரணமாகவே 40 பேரும் உயிரிழக்க நேரிட்டது. அதனால் தலைக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலும் 15,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபடுவார்கள். அனைவரும் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். 

நெல்லை நகரில் கடந்த சில தினங்களாக செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. 29-ம் தேதி மட்டும் இரு இடங்களில் செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஹெல்மெட் அணிவதால் மட்டுமே குற்றங்கள் அதிகரிப்பதாகச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. செயின் பறிப்பு கும்பல் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டிருப்பதுடன், குற்றவாளிகள் குறித்த அடையாளம் தெரியவந்திருப்பதால், விரைவிலேயே கைது செய்யப்படுவார்கள்’’ எனத் தெரிவித்தார்.