வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (30/08/2018)

கடைசி தொடர்பு:15:01 (30/08/2018)

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார்! ஆனால்... அழகிரி வைக்கும் கோரிக்கை

'தி.மு.க-வில் என்னை இணைத்துக்கொள்ளத் தயார் என்றால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தயார்' என்று மு.க.அழகிரி அதிரடியாகக் கூறினார்.

அழகிரி

சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள அமைதிப் பேரணி தொடர்பாக 7-வது நாளாகத் தனது ஆதரவாளர்களுடன் மதுரை டி.வி.எஸ் காலனி வீட்டில் மு.க.அழகிரி ஆலோசனை  நடத்தி வருகிறார். அதிக அளவு தொண்டர்கள் வரவில்லை. முக்கிய நிர்வாகிகள் ஆதரவில்லை என்று சர்ச்சைகள் கிளம்பியது. இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ``நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் குறையாத எண்ணிக்கையில் தொண்டர்கள் பங்கேற்பர். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எங்களுக்குப் பெரிதாக எந்த நெருக்கடியும் தரவில்லை.

தி.மு.க-வுடன் இணைவதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. எங்களை இணைத்துக்கொள்ளத் தயார் என்றால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள நாங்களும் தயார். தி.மு.க-வின் பொதுக்குழுவிலுள்ள 1,500 பேர் மட்டுமே தி.மு.க அல்ல. உண்மையின் பக்கமே தொண்டர்கள் அனைவரும் உள்ளனர் என்பதை நினைவுகொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்தார்.