வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (30/08/2018)

கடைசி தொடர்பு:16:00 (30/08/2018)

`1,200 மருத்துவர்கள்; 4,000 செவிலியர்கள் விரைவில் நியமனம்’ - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் புதிதாக 1,200 மருத்துவர்களும் 4,000 செவிலியர்களும் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

விஜயபாஸ்கர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய எம்.பி.பி.எஸ் முடித்த 1,200 மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.  அத்துடன் 4,000 செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்" என்று தெரிவித்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டிகள் மருத்துவம் பார்த்த விவகாரம் குறித்து கேட்டதற்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

தொடர்ந்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், "தமிழகம் சுற்றுலாப் பயணிகள் வருகையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளின் கட்டமைப்புகள் சிறப்பாக இருப்பதே காரணம்.

வெல்லமண்டி நடராஜன்

சுற்றுலாத் தலங்களில் உள்ள நிறை குறைகளை அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை அடுத்த இரண்டு மாதங்களில் சரிசெய்யப்பட்டு புதுப்பொலிவு பெறும். குற்றால அருவி பகுதியில் சேதமடைந்த பகுதிகள் சரி செய்யப்படும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க