சசிக்குமார் கொலை வழக்கு! - ஜமாத் தலைவர் வீட்டை வளைத்த என்.ஐ.ஏ.

என்.ஐ.ஏ​​​​​​

கோவையை உலுக்கிய இந்து முன்னணிப் பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஜமாத் தலைவர் ஷாஜகான் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

கோவையில் கடந்த 2016 செப்டம்பர்  22-ம் தேதி, இந்து முன்னணிப் பிரமுகர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வந்தபோது, முபாரக், சதாம்உசேன், சுபேர் மற்றும் அபுதாஹிர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 'கொலை சம்பவத்தின் பின்னணியில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்குத் தொடர்பு இருக்கலாம்' என்ற  சந்தேகம் எழுந்ததையடுத்து, இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. 

சசிக்குமார் படுகொலை தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக வழக்கு ஒன்றைப் பதிவு செய்த தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், ஏழு மாதங்களாகத் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இன்று கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் இருந்து எஸ்.பி ராகுல் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கோவை வந்தனர். இவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து சாய்பாபா காலனியில் உள்ள ஜமாத் தலைவர்  ஷாஜகான் என்பவரது வீட்டிலும் அவரது மரக்கடையிலும் சோதனையை நடத்தியுள்ளனர். ஷாஜகான் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவரின் மகன் ஹசன் (எ) முன்னா 2016-ம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். சசிக்குமார் கொலை தொடர்பாக விசாரிக்க வேண்டும் என ஹசனிடம் பலமுறை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் வலியுறுத்தியும் அவர் விசாரணைக்காக இந்தியா வரவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, பூட்டப்பட்ட நிலையிலிருந்த ஷாஜகானின் வீட்டை அவரின் உறவினர்களின் உதவியோடு வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் திறந்தனர் என்.ஐ.ஏ அதிகாரிகள். துபாயில் உள்ள ஹசனை இந்தியா அழைத்து வரவும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஹசனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!