7 வது மாடி... 4 வயது குழந்தை -  நெஞ்சை உறைய வைத்த நிமிடங்கள் 

குழந்தை சாரதா


சென்னை சூளைமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

நேபாளத்தைச் சேர்ந்தவர் கோபால். 32 வயதாகும் இவர், சென்னை சூளைமேடு, சித்ரா அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்க்கிறார். இவரின் மனைவி  கீதா. இவர்களுக்கு சாரதா என்ற 4 வயதில் மகளும், இன்னொரு  கைக்குழந்தையும் உள்ளனர். அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சாரதா ப்ரி-கேஜி படித்து வந்தாள். சம்பவத்தன்று, சாரதாவை தூங்க வைத்துவிட்டு மற்றொரு கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு கீதா, கீழ்தளத்தில் உள்ள ஒரு  வீட்டில் உள்ளவர்களிடம்  பேசிக்கொண்டிருந்தார். அப்போது தூக்கத்திலிருந்து கண் விழித்த சாரதா, அம்மாவைத் தேடியுள்ளார். பால்கனிக்கு வந்த சாரதா, கீழ்தளத்தில் நின்ற அம்மாவை எட்டிப்பார்த்தார். மம்மி என்று அழைத்தபடியே பால்கனியில் நின்றார். ஆனால், சாரதாவின் குரல் கீதாவுக்கு கேட்கவில்லை. இதனால், பால்கனியிலிருந்தபடியே மீண்டும் மம்மி என்று அழைத்தார் சாரதா. அப்போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. 

பால்கனியிலிருந்த சாரதா, தவறி கீழே விழுந்தார். அதை கீதா பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். 7-வது மாடியிலிருந்து கீழே விழுந்த சாரதா ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். அவர் கீழே விழுந்த சத்தம் கேட்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அந்த நிமிடங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சாரதாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பிறகு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சாரதா இறந்தார். 

குழந்தையின் உடலை பார்த்து கீதா, கோபால் ஆகியோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சூளைமேடு போலீஸார், சாரதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

7-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை இறந்துபோன சம்பவம் சூளைமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!