வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (30/08/2018)

கடைசி தொடர்பு:18:30 (30/08/2018)

சிறையில் தமிழ்ச் சேனல்கள் ஒளிபரப்பக்கோரி வழக்கு! தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரை மத்திய சிறையில் உள்ள தொலைக்காட்சியில் தமிழ்ச் சேனல்கள் ஒளிபரப்பக்கோரி ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் தமிழக சிறைத்துறை தலைவர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்துவரும் ரவிச்சந்திரன், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மத்தியச் சிறையில் உள்ள சிறைவாசிகள் பார்ப்பதற்காக டிவி  உள்ளது. ஆனால் சிறைவாசிகளுக்கு இந்தி, இங்கிலிஸ் உள்ளிட்ட வேறு மொழிகள் உடைய சேனல்களே ஒளிபரப்பப்படுகிறது. இதனால் சிறைவாசிகள் பலரும் பார்க்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, சிறைவாசிகளுக்குப் புரியும்படியான தமிழ்ச் சேனல் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் பொது அறிவு, விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், என்.சதிஷ் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாகத் தமிழக சிறைத்துறை தலைவரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டதோடு. வழக்கு விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.