வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (30/08/2018)

கடைசி தொடர்பு:20:11 (30/08/2018)

`கருணாநிதியைத் தவிர்த்துவிட்டு திராவிட வரலாற்றை எழுத முடியாது' - தலைவர்கள் புகழஞ்சலி!#LiveUpdates

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இரங்கல் தெரிவிக்கப்பட்ட வரலாறு கருணாநிதிக்கு உள்ளது என புகழ் அஞ்சலிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார்.

வயது மூப்பின் காரணமாக முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவையொட்டி, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடந்தது. பத்திரிகையாளர்கள், திரைப்பிரபலங்கள், கவிஞர்கள் என அனைவரும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிலையில், சென்னையிலும் நினைவேந்தல் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி,  `தெற்கில் உதிக்கும் சூரியன்' என்ற தலைப்பில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புகழ் அஞ்சலிக் கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பா.ஜ.க சார்பில் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவருக்குப் பதிலாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்காரி மற்றும் அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இரங்கல் தெரிவிக்கப்பட்ட வரலாறு கருணாநிதிக்கு உள்ளது. எமர்ஜென்சி காலத்தில் தி.மு.க-வின் பங்கு அளப்பரியது.நெருக்கடி நிலையை பா.ஜ.க.வும், கருணாநிதியும் தான் முதலில் எதிர்த்தோம் எனக் கூறினார்.

துரைமுருகன்

கருணாநிதியைத் தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது. இந்திய அரசியல் அரங்கில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு மூலக் காரணமாக இருந்தவர் கருணாநிதி. 

தெலுங்கு தேசம் எம்.பி ஒய்.எஸ்.சவுத்ரி

பன்முகத் திறமை கொண்டவர் கருணாநிதி. அவரின் இடத்தை யாரும் பூர்த்தி செய்யவே முடியாது.

காதர் மொய்தீன்

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு மத்திய அரசு நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரித்ததிற்கு பிரதமர் மோடிக்கு நன்றி. கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்.

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் 

சமூக நீதியை பாதுகாக்க பாடுபட்ட உயர்ந்த தலைவர் கருணாநிதி. விதவை மறுமணம், தீண்டாமை ஒழிப்புக்காக பாடுபட்டவர். அவரைப் போல் 80 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வில் ஈடுபட்ட தலைவர் இந்தியாவில் யாரும் இல்லை.

சுதாகர் ரெட்டி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர்

கருணாநிதி ஒரு சகாப்தமாக வாழ்ந்தவர், வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர். மக்கள் நலனுக்காக முன்னோடி திட்டங்களை நிறைவேற்றி தமிழக மக்களின் பேரன்புக்கு உரியவராகவே வாழ்ந்தவர். அரசு நிர்வாகத்தில் தமிழை ஆட்சி மொழியாக செயல்படுத்தினார்.

குலாம் நபி ஆசாத்

இஸ்லாமியர்களுக்கு முதலாவதாக இட ஒதுக்கீடு அளித்த பெருமை கருணாநிதியைச் சாரும். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உழைத்தவர் அவர். தலைமை பண்புக்கு தலைசிறந்தவராக திகழ்ந்தவர். நவீன தமிழகத்தை கட்டமைத்ததில் கருணாநிதியின் பங்கு முக்கியமானது.

பரூக் அப்துல்லா

இன்றைய சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட கூடாது, ஆளுநரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்திய மக்கள் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரபுல்படேல் - தேசியவாத காங்கிரஸ்

அவசர நிலை எதிர்த்தற்காக கருணாநிதியின் ஆட்சி அன்று கலைக்கப்பட்டது. கருணாநிதி பாரத ரத்னா விருதுக்கு முழு தகுதி உடையவர். தமிழகம் மட்டுமின்றி இந்திய தேசத்துக்கே தலைவராக திகழ்ந்தவர்.

சீத்தாராம் யெச்சூரி 

நவீன இந்தியாவை, நவீன தமிழகத்தை உருவாக்க பாடுபட்டவர் கருணாநிதி.

டெரீக் ஓ ப்ரைன்

இந்தியாவின் எதிர்காலத்தை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம் இணைந்து முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் மொழி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் கருணாநிதி. கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சிக்கு முன்னுரிமை அளித்தவர் கருணாநிதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க