வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (31/08/2018)

கடைசி தொடர்பு:10:45 (31/08/2018)

`நீ கருணையில் மற்றுமொரு அன்னை தெரசா'- கேரளத்துக்கு நிதி கொடுத்த அட்சயாவை வாழ்த்திய ஆட்சியர்!

``உனக்கு இந்த வயதில் இருக்கும் இரக்க குணத்துக்கும், நல்ல மனதுக்கும் நீ கண்டிப்பாக பிற்காலத்தில் கலெக்டர் ஆக வருவாய். என்னைவிடச் சிறந்த கலெக்டராக வாழ்த்துகள்" என்று கேரள வெள்ளப்பாதிப்புக்காக நிவாரணம் வழங்கிய கரூர் சிறுமி அட்சயாவை கலெக்டர் அன்பழகன் வாழ்த்தினார்.

அட்சயா


 
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது குமாரபாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, ஜோதிமணி தம்பதியின் மகள் அட்சயா. ஏழாம் வகுப்பு படித்துவருகிறார். பிறவியிலேயே இதயப் பிரச்னையோடு பிறந்த அட்சயாவுக்கு கரூர் 'இணைந்த கைகள்' அமைப்பினர், சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டி, கடந்த வருடம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மூன்றரை லட்சம் செலவுசெய்து அறுவைசிகிச்சை செய்யவைத்தனர். ஆனால், 'சரியாக ஒரு வருடத்தில் மேஜர் ஆபரேஷன் ஒண்ணு பண்ணணும். அப்பதான் முழுமையா குணமாகும்' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால், வரும் நவம்பர் மாதம் அந்த ஆபரேஷன் பண்ணுவதற்காக, மறுபடியும் 'இணைந்த கைகள்', சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டத் தொடங்கியது. ஒரே வாரத்தில் 20,000 கிடைத்திருக்கிறது. அதற்குள், கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்க, அதைப் பார்த்த அட்சயா, மனம் தாளாமல் தன் ஆபரேஷனுக்காகக் கிடைத்த பணத்தில் 5,000 ரூபாயை கேரள நிவாரண நிதிக்காகக் கொடுத்தார். 

இந்தச் செய்தி, விகடன் இணையதளத்தில் முதலில் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற தமிழ், ஆங்கில, சர்வதேச மீடியாக்கள்  பதிவுசெய்ய, அட்சயாவின் கருணை உலக அளவில் கவனம்பெற்றது. இந்தியாவில் உள்ள முக்கிய மருத்துவமனைகள் மற்றும் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்தும் அட்சயாவுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை செய்ய அழைப்பு வந்தது. இருந்தாலும், ஏற்கெனவே ஆபரேஷன் செய்த அப்போலோ மருத்துவமனையிலேயே அட்சயாவுக்கு அறுவைசிகிச்சை செய்ய அட்சயா குடும்பம் விரும்பியது. இதற்கிடையில், முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் அட்சயாவைப் பார்த்து பாராட்டியதோடு, அவருக்கு 25,000 வழங்கிக் கௌரவித்தார். அதோடு, தன் செலவிலேயே அட்சயாவுக்கு இதய ஆபரேஷன் செய்வதாக உத்தரவாதம் தந்து சென்றிருக்கிறார். 

இந்நிலையில், அரசு தரப்பில் கரூர் மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் குழு வந்து, அட்சயாவை சோதித்துப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து, அரசு மருத்துவக் காப்பீடு மூலம் ரூபாய் ஒரு லட்சம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வழங்கப்பட இருப்பதாக கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அட்சயாவையும் அவரது தாயாரையும் அழைத்த கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், அட்சயாவை ஏகத்துக்கும் பாராட்டினார். அப்போது, ``உன் கருணையால் எல்லாரையும் வென்றுவிட்டாய். நீ கருணையில் மற்றுமொரு அன்னை தெரசா. உன்னைப் போன்ற சிறுமிகளும், சிறுவர்களும் தாம் நாட்டுக்குத் தேவை. நீ வருங்காலத்தில் கலெக்டராக ஆசைப்படுவதாகச் சொன்னார்கள். நீ கண்டிப்பாக என்னைவிடச் சிறந்த கலெக்டராக வருவதற்கு வாழ்த்துகள்" என்று பாராட்டினார்.