வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (31/08/2018)

கடைசி தொடர்பு:10:08 (31/08/2018)

கண் மருத்துவமனையில் தீ விபத்து! - அலறியடித்து ஓடிய நோயாளிகள்

நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனையில், நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் சிகிச்சைக்குச் சென்ற நோயாளிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

தீ

நாகர்கோவில் வெட்டூர்ணி மடத்தில் இயங்கிவருகிறது பெஜான்சிங் கண் மருத்துவமனை. உள் நோயாளிகள், கண் பரிசோதனைக்கு வரும் வெளிநோயாளிகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் இருந்தனர். கண் மருத்துவமனையின்  5-வது மாடியில் உள்ள கோப்புகள் வைக்கும் அறையில் மின்கசிவு காரணமாக, இன்று காலை திடீரென தீ பிடித்தது. மருத்துவமனைக்கு வெளியே நின்றவர்கள், புகை கிளம்பியதைப் பார்த்து சத்தம்போட்டனர். இதனால், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அலறியபடி வெளியே ஓடினர். உடனே தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நோயாளிகள்

நாகர்கோவில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள்ளாக, அங்கிருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. தீயினால், மருத்துவமனையில் இருந்த இருக்கைகள், கம்ப்யூட்டர் கருவிகள் மற்றும் கோப்புகள் எரிந்து நாசமாயின. கண் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை  ஏற்படுத்தியது.