திருவள்ளூர் அருகே மணல் கடத்தல் - ஜேசிபி எந்திரம் உள்ளிட்டவை பறிமுதல்!

திருவள்ளூர் அருகே செங்கல் சூளையில், 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள மணல் கடத்தி வைத்திருந்த, ம.தி.மு.க பிரமுகரின் லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய 4 டிப்பர் லாரிகள், 2 ஜேசிபி எந்திரங்களைப் பறிமுதல்செய்து, அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மணல் கடத்தல்

சேம்பர் உரிமையாளர் ம.தி.மு.க-வைச் சேர்ந்த புல்லட் குமார் என்பவர், திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு பகுதியில் செங்கள் சேம்பர் நடத்திவருகிறார். அந்த சேம்பரில் மணல் கடத்திவைத்து விற்பனை செய்துவந்தார். அதுதவிர, ஜேசிபி மூலம் சேம்பரில் பூமிக்கடியில் உள்ள மணலைத் தோண்டி மலைபோல குவித்துவைத்துள்ளார். இது தொடர்பாக திருவள்ளூர் தாசில்தார் தமிழ் செல்வனுக்குப் புகார் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று மணல் கடத்தலில் ஈடுபட்டுவந்த நாலு டிப்பர் லாரிகள், ஒரு ஜேசிபி ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர். சேம்பரில் வைக்கப்பட்டிருந்த மணலின் மதிப்பு,  50 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  லாரி மற்றும் ஜேசிபி ஆகியவற்றை  புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குமாரின் லாரி ஓட்டுநர்  கார்த்திக்  என்பவரைக் கைது  செய்து சிறையில் அடைத்தனர். 

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆறு மற்றும் ஏரிகளில் மணல் கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுகுறித்த தொடர் புகாரின் பேரில், சிறப்பு காவல் பிரிவு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. ஆற்றில் இருந்து மாட்டு வண்டி, இருசக்கர வாகனங்கள்மூலம் திருட்டுத்தனமாக மணல் கொண்டுபோவோர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல், லஞ்சம் வாங்கிக்கொண்டு விட்டுவிடுகின்றனர்.  தொடர் மணல் கொள்ளை சம்பவங்களால் பாலங்கள் இடிந்துவிழும் ஆபத்து உள்ளதாகவும், இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!