வெளியிடப்பட்ட நேரம்: 04:10 (31/08/2018)

கடைசி தொடர்பு:09:06 (31/08/2018)

வேலூர் அருகே கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்ட வருவாய்த் துறையினர்!

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரியகிராமம் பகுதியில், கடந்த 4 வருடங்களாகக் கொத்தடிமைகளாக இருந்து மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுவந்த 23 பேரை வருவாய் துறையினர் மீட்டனர்.

கொத்தடிமை


காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரியகிராமம் பகுதியைச் சேர்ந்தவர், காதர்பாஷா (37). இவர், அதே பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 5 குடும்பங்களைக் கொத்தடிமைகளாக அழைத்து வந்து, முன் தொகையாக 5000 கொடுத்து, மரம் வெட்டும் வேலையில் ஈடுபடுத்திவந்துள்ளார். உரிய கூலி வழங்காத காதர்பாஷா, வாரம் ஒருகுடும்பத்துக்கு 100 ரூபாய் மட்டுமே கொடுத்துவந்ததோடு அவர்களைத் தரக்குறைவாகவும் பேசி மிரட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன், அந்த இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு அடிப்படை வசதிகள் இன்றி கொத்தடிமைகளாக இருந்த  ஐந்து குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் இருந்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அனைவரையும் மீட்ட வருவாய் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும், தப்பியோடிய காதர் பாஷாவை நெமிலி போலீஸார் தேடிவருகின்றனர்