வெளியிடப்பட்ட நேரம்: 10:58 (31/08/2018)

கடைசி தொடர்பு:10:58 (31/08/2018)

`குஜிலி'க்கும் பெண்களுக்கும் தொடர்பு இல்லை... `குஜிலி இலக்கியம்’ பெயர்க்காரணம் தெரியுமா?!

``பொதுவாக 'குஜிலி' என்பது பெண்களைப் பாலியல் அடிப்படையில் மோசமாகக் குறிப்பிடும் ஒரு சொல்லாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் குஜிலி என்பதற்கும் பெண்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை."

சென்னை தினத்தைக் கொண்டாடும்விதமாக, சென்ற வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவையெல்லாம் சென்னையின் கோயில்கள், சூழலியல் சார்ந்து, வரலாற்று இடங்கள் சார்ந்து அமைந்திருந்த நிகழ்ச்சிகளாகவே இருந்தன. சென்னையில் தோற்றம் பெற்ற முக்கிய இலக்கியமான `குஜிலி இலக்கியம்' பற்றி எங்கும் எவரும் பேசியதாகத் தெரியவில்லை. அந்தக் குறையைப் போக்கும்விதமாக, சென்னை தினக் கொண்டாட்டத்தின் இறுதிநாளில் குஜிலி இலக்கியத்தை அறிமுகம்செய்யும்விதமாக `Press Institute of India' ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் குஜிலி இலக்கியம் குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் அதை இப்போது தெரிந்துகொள்ளவேண்டியதன் தேவை குறித்தும் சென்னை பற்றிய வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர் நிவேதா லூயிஸ் பேசினார்...

குஜிலி இலக்கியம்

``பொதுவாக `குஜிலி' என்பது பெண்களை பாலியல் அடிப்படையில் மோசமாகக் குறிப்பிடும் ஒரு சொல்லாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், `குஜிலி' என்பதற்கும் பெண்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குஜிலி என்றால், மாலை நேரம் என அர்த்தம். சென்னை மருத்துவக் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு தெருவில் மாலை நேரச் சந்தை நடந்துள்ளது. இங்கு பேனாக்கள், பூட்டுகள், கடிகாரங்கள், விளக்குகள், உட்பட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் இங்கே திருட்டுப்பொருள்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்படி விற்பனை நடைபெற்ற இந்தப் பகுதி  `குஜிலி தெரு’ எனப் அழைக்கப்பட்டுள்ளது. இது, சென்னையில் மட்டுமல்லாது புதுக்கோட்டை, திருச்சி, தூத்துக்குடி போன்ற பகுதிகளிலும் உள்ளது.

இந்தப் பகுதியில் வியாபாரம்  செய்ய வந்த அதே வேளையில், சென்னையில் நடக்கும் மிக முக்கியமானகுஜிலி இலக்கிய ஆய்வு நூல் நிகழ்வுகள் குறித்துப் பாடல்கள் இயற்றி அதை அச்சிட்டு விற்பனை செய்யும் தொழிலும் நடந்துள்ளது. இந்தப் பாடல்களில் தென் இந்தியாவின் முதல் ரயில்நிலையமான ராயபுரம் ரயில்நிலையம் கட்டப்பட்டது, 1877-ம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சம், சென்னையில் நடந்த முதல் ரயில் பயணம், சென்னையில் பறக்கவிடப்பட்ட முதல் விமானம், பக்கிங்காம் கால்வாய் வெட்டப்பட்டது, கிண்டியில் நடந்த குதிரைப்பந்தயம், கொலைகள், எம்டன் கப்பல் தாக்குதல் முதற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இவை மட்டுமல்லாமல், பெண்கள் பிரச்னைகள், கொசுக்களால் ஏற்பட்ட தொல்லைகள் எனப் பொழுதுபோக்குக்காகவும் சில பாடல்கள் இயற்றப்பட்டு அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தப் பாடல்கள் எல்லாம் சென்னையின் அடித்தட்டு மக்களால் எளிய தமிழில் பாடப்பட்டு, விலை மலிவான தாளில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டவையாக இருந்துள்ளன. இவை, இசைநயத்தோடு பாடப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு பாடலும் என்ன ராகத்தில் பாடவேண்டும் என்ற குறிப்புகளையும் உள்ளடக்கியுள்ளன. இந்தப் பாடல்கள் இந்தத் தெருவில் விற்பனை செய்யப்பட்டதால், இதற்கு `குஜிலி இலக்கியம்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். இது எளிய மக்களால் பாடப்பட்ட  இலக்கியங்கள். இவற்றில் முறையான தமிழ் கையாளப்படவில்லை என இவற்றைப் புறக்கணித்துவிட முடியாது. குஜிலி பாடல்கள் அன்று மிகவும் பிரசித்திபெற்று விளங்கின. 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சென்னையில் நடந்த பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை அதுவும் எளிய மக்களின் பார்வையில் பார்ப்பதற்கு இவைதாம் இப்போது நமக்கு இருக்கும் மிக முக்கியமான ஆவணங்கள்” எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த இலக்கிய ஆய்வுக்கு, பேராசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதியின் `முச்சந்தி இலக்கியம்’ என்ற நூல்தான் மூல ஆதாரமாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் குஜிலி இலக்கியப் பாடல்கள் சில அதில் குறிப்பிடப்பட்டிருந்த ராகத்தோடு மோனாலி பாலசுப்பிரமணியம் என்பவர் பாடினார். நிகழ்வுக்கு வந்திருந்த பாலகிருஷ்ணன் வாசுதேவன் என்பவர், இன்னும் பதிப்பிக்கப்பெறாத பல குஜிலி இலக்கியப் பிரதிகளைப் பார்வையாளர்களுக்குக் காட்டினார்.

வெகுஜன மக்களின் பார்வையிலான வரலாறும் உண்டு என்பதையும், அவற்றை அவர்கள் பதிவுசெய்துள்ளார்கள் என்பதையும் இந்த நிகழ்வு வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. அப்படிப் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தி நமது வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும்போது இன்னும் முழுமையான வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் இந்த நிகழ்வு உணர்த்தியது.


டிரெண்டிங் @ விகடன்