வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (31/08/2018)

கடைசி தொடர்பு:12:41 (31/08/2018)

தி.மு.க-வில் மீண்டும் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன்!

மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியன், மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார். இன்று சென்னைக்கு வந்த அவர், ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணைந்தார். 

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த கருப்பசாமி பாண்டியன்

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர், கருப்பசாமி பாண்டியன். ’கானா’ என்று அழைக்கப்பட்ட அவர், எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவர். 1977-ம் வருடம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு, தனது 25 வயதிலேயே எம்.எல்.ஏ- வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்து திறமையாகச் செயல்பட்டார். ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி தொகுதிகளில் வெற்றிபெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார். அதனால், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க-வில் ஐக்கியமானார். அதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்ட தி.மு.க செயலாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. 

நெல்லை மாவட்ட தி.மு.க-வில் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டுவந்தது. ஆனாலும் ’கானா’ அணியினர், கட்சியைத் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். இந்த நிலையில், நெல்லை மாவட்ட தி.மு.க-வை நிர்வாக வசதிக்காக நெல்லை மேற்கு, கிழக்கு, மத்திய மாவட்டங்களாக கட்சித் தலைமை பிரித்தது. 

அப்போது, நெல்லை மேற்கு மாவட்டத்துக்கு அவரைப் போட்டியிடுமாறு ஆதரவாளர்கள் பலரும் வற்புறுத்தினார்கள். அதை ஒப்புக்கொள்ள மறுத்த கருப்பசாமி பாண்டியன், ‘நான் தாசில்தாராக இருந்தவன். இனிமேல் தலையாரியாகச் செயல்பட என் மனம் ஒப்பவில்லை. அதனால், நான் உள்கட்சி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை’ என்று சொல்லி, கட்சித் தலைமையிடம் அதிருப்தியைச் சம்பாதித்தார். 

அத்துடன், தனது மகன் வி.கே.பி.சங்கரை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடச் செய்தார். ஆனால், அவருடன் இருந்த ஆதரவாளர்களே அவருக்கு எதிராகக் களம் இறங்கி, அவரது மகனை தோற்கடித்தனர். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கட்சியிலிருந்து விலகி இருந்தார். அத்துடன், தலைமையை அவ்வப்போது விமர்சிக்கவும் செய்தார். அதனால், 2015-ம் ஆண்டு கட்சியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர், ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தலைமையில் கட்சி செயல்பட்டபோது, கருப்பசாமி பாண்டியனுக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சசிகலா சிறைக்குச் சென்றதும் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்ட போது, அதை ஏற்க மறுத்து கட்சியில் இருந்து ஒதுங்கினார். பின்னர், தி.மு.க-வில் சேர அவர் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால், நெல்லை மாவட்ட தி.மு.க-வில் அவருக்கு எதிரானவர்கள் அனைவரும் அவரை கட்சியில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது முயற்சி பலன் அளிக்காமல் இருந்தது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவரை தி.மு.க-வில் சேர்க்க கட்சி மேலிடம் முடிவுசெய்திருந்தநிலையில், கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மறைந்ததால், கருப்பசாமி பாண்டியன் கட்சியில் சேருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ள ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சென்னை வந்த அவர்,  அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்தார். தன்னை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார்.