வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (31/08/2018)

கடைசி தொடர்பு:11:43 (31/08/2018)

`லஞ்சம் தந்தால்தான் உங்கள் கணக்கில் பணம் ஏறும்'- வீட்டுக்கே வந்து ஊழியர்கள் கேட்பதால் வேதனையில் விவசாயி!

விவசாயிகள் படாதபாடுபட்டு விளையவைத்த நெல்லை, அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொண்டுசென்று போட்டால், மூட்டை ஒன்றுக்கு  25 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள் அதன் ஊழியர்கள். அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்தால்தான் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் ஏறும் என்பதோடு, வீட்டுக்கே வந்து லஞ்சம் கேட்கும் அவலம் நடப்பதாகவும், இந்த லஞ்சப் பணம் உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரிகள் வரை செல்கிறது என்றும் லஞ்சம் வாங்கிய பிறகே, நெல்லை கொள்முதல்செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள் எனவும் வேதனை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.

பட்டுக்கோட்டையை அடுத்த பண்ணைவயல் கிராமத்தில் உள்ளது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம். இதில், அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற விவசாயி, தன் வயலில் அறுவடைசெய்த 40 கிலோ எடை கொண்ட 900 மூட்டை வரையிலான நெல்லை போட்டுள்ளார். நெல்லை எடுத்துக்கொண்ட அதிகாரிகள், 'மூட்டைக்கு 25 ரூபாய் வீதம் சுமார்  25 ஆயிரம் பணம் கொடுங்கள்' என அதன் ஊழியர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு செந்தில்குமார், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. முதலில் பத்தாயிரம் பணம் தருகிறேன். நீங்கள் வங்கிக் கணக்கில் ஏற்றிவிடுங்கள். பின்னர், பாக்கி பணத்தை எடுத்துத் தருகிறேன்'' என்றிருக்கிறார். அதை மறுத்த ஊழியர்கள், ''உடனே கொடுக்க வேண்டும். அதன் பிறகுதான் வங்கிக் கணக்கில் பணம் ஏறும்'' என்று சொல்ல, வாக்குவாதத்தில் ஈடுபட்ட செந்தில்குமார்,  கோபத்துடன் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அதன்பிறகு, வீட்டுக்கே சென்று நேரடி நெல் கொள்முதல் ஊழியர்கள் லஞ்சம் கேட்க, லஞ்ச ஒழிப்புத்துறை வரை சென்றும் தனக்கான நியாயம் கிடைக்கவில்லை என்று  புலம்பிவருகிறார் செந்தில்குமார்.

இதுகுறித்து செந்தில்குமாரிடம் பேசினோம். ''கடந்த மாதம் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சாக்குப் பைகள் பற்றாக்குறை எனக் கூறி, மழையில்  நனையவைத்து வீணடித்ததோடு, விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடினர். இன்றைய சூழ்நிலையில், விவசாயி விவசாயம் செய்வது என்பதே பெரிய விஷயம். ஒவ்வொரு விவசாயியும் பல இன்னல்களுக்கு மத்தியில் கடனை வாங்கி பயிர் செய்வதோடு, அந்தப் பயிரை காப்பாற்றி வளர்க்கவும் போராடுகிறான். பாடுபட்டு வளர்த்த நெல் பயிரை அறுவடைசெய்து அரசு கொள்முதல் நிலையத்தில் போட்டால், அவர்கள் மூட்டை ஒன்றுக்கு 25 ரூபாய் கேட்டு விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள். நான் என் நெல்லை போட்ட பிறகு, என்னிடம் 25,000 ரூபாய் பணம் கேட்டார்கள். நான் முதலில் பத்தாயிரம் தருகிறேன் என்றேன். அதற்கு  ஒத்துக் கொள்ளாமல், விவசாயி செந்தில்குமார்முழுப் பணத்தையும் உடனே கேட்டார்கள். நான் கோபத்தோடு திரும்பி வந்துவிட்டேன். அப்புறம் என் வீட்டுக்கே வந்த அதன் ஊழியரான  தங்கத்துரை, லோடு மேன்கள் மதியழகன், ஜெயபால் போன்றோர் அதிகாரிகள் எங்களை அவசரப்படுத்துறாங்க; புரிஞ்சிக்கங்க. கொள்முதல் நிலையத்தில் அடியில் தொடங்கி உச்சத்தில் உள்ள அதிகாரிகள் வரைக்கும்  லஞ்சப் பணம் செல்கிறது. இதில் உங்களுக்கும் லாபம்தானே என மிரட்டும் தொனியாக  பணம் கொடுங்க என்றனர். அவர்கள் பணம் கேட்டதோடு மட்டுமில்லாமல், நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்து நாலு பேர் இருக்கும்போது  என்னை அவமானப்படுத்தி வேதனைப்படுத்திவிட்டார்கள்.

மற்ற இடங்களில் எல்லாம் மூட்டைக்கு 10 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் கொள்முதல் செய்கிறார்கள். ஆனால், பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், 25 ரூபாய் அடாவடியாக வசூலித்து,  விவசாயிகள் வயிற்றில் அடித்து பணத்தைப் பறிக்கிறார்கள். லஞ்சத்தைத் தவிர்ப்பதற்காகத்தான் விவசாயியின் வங்கிக் கணக்கில் பணம் போடும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிகாரிகள், பணத்தை கொடுத்தால்தான் கணக்கில் பணம் ஏறும் என்கின்றனர். எந்த விவசாயி மொத்தமாக பணத்தை கையில் வைத்திருக்கிறான். இதற்கு ஒரு முடிவு கட்ட தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்று புகார் செய்தால், யார் லஞ்சம் கேட்டார்களோ அவர்களை விட்டுவிட்டு, இந்தத் துறையின் உயர் அதிகாரியிடம் கொண்டுபோய் நாங்கள் கொடுக்கும் பணத்தைக் கொடுங்கள் என்றனர். சார், லஞ்சம் கேட்டவங்ககிட்டதானே கொடுக்கணும். அதுதானே முறை என்றதை காதில் வாங்கவில்லை. எனக்கான நியாயமும் கிடைக்கவில்லை. நெல் கொள்முதல் நிலையத்தில்  நடக்கும் அக்கிரமங்களால் என்னைப்போலவே விவசாயிகள் அத்தனை பேரும் மனம் நொந்து இருக்கின்றனர். இதில் அரசு தனிக் கவனமெடுத்து, உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, விவசாயிகளைக் காக்க வேண்டும்'' என்றார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து தங்கத்துரையிடம் கேட்டப்போது, பிறகு பேசுகிறேன் என்று கூறியதோடு, பதில் கூற மறுத்துவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க