வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (31/08/2018)

கடைசி தொடர்பு:11:58 (31/08/2018)

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தும் குழுவின் தலைவராக தருண் அகர்வால் நியமனம்!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் என்பவரைத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்துள்ளது. 

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் இறுதியில் கலவரமாக மாறியதை அடுத்து, ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் உத்தரவை எதிர்த்து, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம், உற்பத்திப் பணிகளை மட்டும் மேற்கொள்ளக் கூடாது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதோடு, முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அதன்படி, விசாரணைக் குழுத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி, வஜீப்தார் நியமிக்கப்பட்டார். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக பொறுப்பில் நீடிக்க முடியாது என்றுகூறி குழுவிலிருந்து விலகுவதாக சமீபத்தில் வஜீப்தார் அறிவித்தார். இதனிடையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்துவரும் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளது. 

இந்தநிலையில், குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து வஜீப்தார் விலகியதை அடுத்து, முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் என்பவரைக்  குழுத் தலைவராகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்துள்ளது.