பட்டாக்கத்தி விவகாரம்! மாநில கல்லூரி மாணவர்கள் மத்தியில் உருக்கமாகப் பேசிய போலீஸ் கமிஷனர் | chennai police commissioner Viswanathan meets presidency college student

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (31/08/2018)

கடைசி தொடர்பு:13:30 (31/08/2018)

பட்டாக்கத்தி விவகாரம்! மாநில கல்லூரி மாணவர்கள் மத்தியில் உருக்கமாகப் பேசிய போலீஸ் கமிஷனர்

சாலையில் கத்தியை உரசிய மாணவர்களின் செயலுக்குப் பிறகு, இன்று மாநிலக் கல்லூரிக்குச் சென்று மாணவர்களிடையே உரையாடினார், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன். 

காவல் ஆணையர்

சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள், தினமும் நூற்றுக்கணக்கான பேர் பேருந்தில் பயணம் செய்கின்றனர். அப்படி பேருந்தில் வரும் இரு கல்லூரி மாணவர்களும் அடிக்கடி ஏதேனும் ஒரு பிரச்னை செய்து மாட்டிக்கொள்வதை வழக்கமாகவே செய்துவருகின்றனர். 

பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்றில் ஏறிய சில கல்லூரி மாணவர்கள், படியில் நின்றபடி தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியை சாலையில் உரசியபடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் செயலைக் கண்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, இந்தச் சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறியது. மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களே இந்தச் செயலில் ஈடுபட்டனர் என்ற தகவல் கிடைத்ததும் அவர்கள் பற்றிய முழு விவரங்களுடன் வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், நான்கு மாணவர்களைக் கைதுசெய்துள்ளனர். 

இந்த நிலையில், இது தொடர்பாகப் பேச சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், இன்று மாநிலக் கல்லூரிக்கு நேரடியாகச் சென்றார். இன்றைய இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “மாணவர்கள் என்பவர்கள், மிகப் பெரிய பொறுப்புள்ளவர்கள். அதை அனைவரும் சரியாக செய்ய வேண்டும். நீங்கள் நினைத்தால் நாட்டின் எதிர்காலத்தை மாற்ற முடியும். படிப்பதற்காகப் பல மாணவர்கள் பெரும் கஷ்டப்படுகின்றனர். ஆனால், உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்தி, வாழ்க்கையில் நல்லபடியாக முன்னேறுங்கள். உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ, அதில் கவனம் செலுத்துங்கள். 

என் தாத்தா காவலர். எனது தந்தை எஸ்.ஐ. நான் அரசுப் பள்ளியில் படித்தவன். கிராமத்தில் இருந்து வந்து, நான் மாநிலக் கல்லூரியில் படித்தது பிரமிப்பாக இருந்தது. எங்கள் வேலை எளிதானது அல்ல. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வன்முறை இல்லாமல் அனைவரும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளால், கல்லூரிக்கும் மற்ற மாணவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எதிரிகளிடம் அன்பாக இருக்க வேண்டும். பலனை எதிர்பார்க்காமல் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த மற்ற கலைகளையும் கற்றுக்கொள்ளுங்கள். அது வாழ்க்கையில் எப்போதும் உதவும்” என்று கூறினார்.