வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (31/08/2018)

கடைசி தொடர்பு:14:45 (31/08/2018)

‘மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு’ - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

'அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகத்தின் பல இடங்களில் மிதமானது முதல் கன மழையும் பொழியும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மழை

சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்துகொண்டிருக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 179 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பாக 204 மி.மீ அளவு மழை பதிவாகும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள தேனி, திண்டுக்கல், நெல்லை, கோவை போன்ற மாவட்டங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. இது, இயல்பைவிடவும் அதிகமாக உள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், தருமபுரி போன்ற மாவட்டங்களில் இயல்பைவிட 50 சதவிகிதம் குறைவாகவே மழை பொழிந்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகவே நேற்று முதல் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்துகொண்டிருக்கிறது. அதிகபட்சமாக, நேற்று சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் மிதமானது முதல் கன மழை பொழியும்.  சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பொழியும். மாலை நேரங்களில் அதிக மழை பொழிய வாய்ப்புள்ளது” என்று கூறினார்.