வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (31/08/2018)

கடைசி தொடர்பு:15:00 (31/08/2018)

`காலில் விழும் அடிமைத்தனங்களை விட்டொழிப்பொம்' - தொண்டர்களுக்கு தி.மு.க தலைமை அறிவுரை!

'தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காலில் யாரும் விழக்கூடாது' எனத் தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளது. 

ஸ்டாலின்

இதுகுறித்து தி.மு.க தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரை சந்திக்க வருகின்ற தொண்டர்கள், ஆர்வமிகுதியால் அவர் காலில் விழ வேண்டாம். காலில் விழுந்து அவருக்கு மனச் சங்கடத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, ஸ்டாலினுக்கு மாலைகள், சால்வைகள் ஆகியவற்றை அணிவதற்குப் பதிலாகப் புத்தகங்களைத் தாருங்கள். அப்படி அளிக்கப்படும் புத்தகங்கள், நூலகங்களில் வைக்கப்பட்டு பல்வேறு மாணவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழிவகுக்கப்படும். 

மேலும், கழக நிகழ்ச்சிகள் நடக்கும்போது, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும்வண்ணம் அதிக அளவிலான பேனர்கள் வைப்பதைக் கைவிட வேண்டும். நிகழ்ச்சி நேரம், இடம் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள ஏதுவாக, ஒருசில பேனர்கள் வைக்கப்பட்டால் போதுமானது. ஆடம்பர பேனர்களுக்குப் பதில் கழகத்தின் கொடி மற்றும் தோரணங்கள் கட்டி சிறப்பித்தால் போதும். அண்ணா, கருணாநிதி காத்துவந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் லட்சியத்தை கட்டிக்காப்போம். காலில் விழுந்து கவனத்தைக் கவர்வது போன்ற அடிமைத் தனங்களை விட்டொழித்து, அரசியலில் உயர்ந்த பண்பாடு செழித்தோங்க ஒத்துழைப்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க